பிரித்தானியாவில் பயன்படுத்தும் கோவிட் - 19 தடுப்பூசி மிகவும் பயனுள்ளது! ஆய்வில் வெளியான தகவல்
கோவிட் - 19 தொற்றுக்கு எதிரான ஃபைசர் மற்றும் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களிடையே கோவிட் நோய்த்தொற்றை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகின்றன.
இந்த தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் பொது சுகாதார ஆய்வை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் முதல்கட்டத் தடுப்பூசி வழங்கப்பட்டு 4 வாரங்களுக்குப் பின்னர், ஃபைசர் ஒரு குப்பிக்கான நோய் பாதுகாப்பு 57 முதல் 61 வீதம் வரையிலும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பாதுகாப்பு 60 முதல் 73 வீதமாகவும் இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குப்பி தடுப்பூசியினால் 80 வீதமாக மருத்துமனை அனுமதிகள் தவிர்க்கப்பட்டதாக தரவு தெரிவிக்கிறது. அத்துடன் கோவிட - 19 இறப்புகளை 83 வீதமாக குறைக்கவும் இந்த தடுப்பூசிகள் வழிவகுத்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கைக்கழுவுதல் மற்றும் வீட்டிலேயே இருப்பது மிகவும் முக்கியம் என்று ஆய்வு பரிந்துரைத்துள்ளது.