ட்ரம்பின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கடந்த மூன்று வார காலமாக, மேற்கொள்ளப்பட்டுள்ள, USAID இன் நிதி முடக்கத்தை தற்காலிகமாக நீக்குமாறு, அமெரிக்க நீதிமன்றம், ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த திடீர் முடக்கம் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க உதவியை எதிர்பார்க்கும் பிற அமைப்புகளுக்கு ஏற்படுத்திய பெரும் சேதத்தை சுட்டிக்காட்டி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த கோரி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, 90 நாள் மொத்த பணிநிறுத்தத்தால் எதிர்மறையாக பாதிக்கப்பட்டதாகக் கூறிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டு உதவி ஒப்பந்தக்காரர்களுக்கான நிதியை தற்காலிகமாக விடுவிக்குமாறு குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பு நடைமுறையில் இருந்த வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருந்தார்.
சுகாதார நிறுவனங்கள்
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள இரண்டு சுகாதார நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட அரசு நிறுவனங்களை அகற்ற டிரம்ப் முயன்றுள்ளார். அவர் அரசாங்கத்தின், USAID எனப்படும் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின், மிகப்பெரிய மறுவடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார், மேலும் செலவுகளைக் குறைக்கும் பணியை தனது பில்லியனர் கூட்டாளியான எலோன் மஸ்க்கிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி
ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவில்லை என்று குற்றம் சாட்டி, ஆறு தசாப்தங்களாக செயற்பட்டு வரும், பழமையான அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமான USAID ஐ அகற்றுவதில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் நண்பர் எலோன் மஸ்க் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிக்கு, பெரிய பின்னடைவை ஏற்படுத்திய இரண்டாவது தீர்ப்பாக, இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
வோஷிங்டனில் உள்ள அமெரிக்க, மாவட்ட நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, உதவி குழுக்கள் மற்றும் பலர், வெளிநாடுகளில் உள்ள திட்டங்களுக்கான USAID நிதி திடீரெனவும் முழுமையாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறுவதை குறிவைக்கும் முதல் தீர்ப்பாக அமைந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நிதி குறைப்பு, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஒப்பந்தக்காரர்கள், விவசாயிகள் மற்றும் விநியோகஸ்தர்கள், ஏற்கனவே மேற்கொண்ட பணிகளுக்காக, நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் ஊதியக் கொடுப்பனவுகளை இல்லாமல் செய்துள்ளது.
மேலும் அந்த நிறுவனங்களில் பரந்த அளவிலான பணிநீக்கங்களை கட்டாயப்படுத்தியுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாடுகளில், அமெரிக்க நிதியைப் பெறும் சுகாதார அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எய்ட்ஸ் தடுப்பூசி கூட்டணி மற்றும் உலகளாவிய சுகாதார சபை ஆகிய இரண்டு அமைப்புகள் தொடர்ந்த வழக்கிலேயே இந்த தற்காலிக உத்தரவை, குறித்த நீதிமன்ற நீதிபதி அமீர் அலி பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, டிரம்ப் நிர்வாகம் வெளிநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான USAID உதவித் திட்டங்களுக்கான நிதியை நிறுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும், அதை அகற்ற வேண்டுமா என்றும் தெரிவித்து, அந்த நிறுவனத்தின் நிதிகளை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)