கொழும்பு 7 இல் உள்ளவர்கள் கூறுவது போல் நாட்டை முடக்க முடியாது - அமைச்சர் ஜோன்ஸ்டன்
ஜனாதிபதி செவி கொடுத்து கேட்பதில்லை எனவும் அரசாங்கம் என்ற வகையில் தீர்மானங்களை எடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டை உருவாக்கவுமே சிலர் ஊடகங்களுக்கு சென்று வெளியிடும் கருத்துக்கள் வருவதாக அமைச்சர் ஜோன்ஸ்டர் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு சென்று கருத்துக்களை வெளியிடாது தன்னிடம் வந்து யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வைத்திய சங்கங்கள் மாத்திரமல்லாது மருத்துவர் என்ற வகையில் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே விடுக்கும் கோரிக்கையின்படி 14 நாட்கள் நாட்டை முடக்கும் முன்னர் ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருப்பதாகவும் அனைவரும் கூறுவதை செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
14 நாட்கள் நாட்டை மூட வேண்டும் என வைத்திய சங்கங்கள் கூறுவதை நான் பார்த்தேன். அதேபோல் எமது அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேவும் மருத்துவர் என்ற வகையில் நாட்டை 14 நாட்கள் மூடுமாறு கோரினார். இவற்றை ஜனாதிபதி கவனிக்க வேண்டும். அனைவரும் கூறுவதை செயற்படுத்த வேண்டுமாயின் நாட்டிற்கு ஜனாதிபதி ஒருவர் அவசியமில்லை.
இதன் காரணமாவே சில தினங்களுக்கு நாட்டை மூட நாங்கள் தீர்மானித்தோம். கொழும்பு 7 இல் உள்ள பணம் உள்ளவர்கள் கூறுவதை கேட்டு தீர்மானங்களை எடுத்தால், அது பெரும்பான்மையான மக்களுக்கு செய்யும் அநீதி.
60 முதல் 70 வீதமானவர்கள் அன்றாடம் தொழில் புரிந்து வருமானம் பெறுபவர்கள். இவர்களே நாட்டில் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால், கவனமாக நாங்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அடுத்த வாரம் என்ன நடக்கின்றது என்பதை எம்மால் கண்டறிய முடியும்.
அதனை பாார்த்து தீர்மானங்களை எடுப்போம். நாம் இதற்கு அச்சப்பட வேண்டியதில்லை. நாங்கள் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். முதலாவது அலையை நாம் எதிர்கொண்டோம். இரண்டாவது அலையை எதிர்கொள்ள முடியாது என்றே கூறினார்கள். அதனையும் எதிர்கொண்டோம்.
மூன்றாவது அலையையும் நாடு என்ற வகையில் எதிர்கொண்டு வெளியில் வருவோம் என்பதே எனது நிலைப்பாடு. ஊடகங்களிடம் சென்று கூற வேண்டாம் நேரத்தை தருகிறேன் யோசனைகளை தன்னிடம் முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
ஊடகங்களுக்கு சென்று நாட்டை முடக்குமாறு மக்களிடம் கூறி பயனில்லை எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.