இடிந்து வீழ்ந்த கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ஆம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் கடந்த 2015முதல்2018ம் ஆண்டுவரை இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளால் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், முரசுமோட்டை ஊரியான் ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் 2018ஆம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் சுவர்கள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது குறித்த கொங்கிறீட் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
விவசாயிகள் விசனம்
இதனை விட பன்னங்கண்டி மற்றும் கோரக்கண் கட்டு ஊரியான் மேற்கு ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாது சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பெருந்தொகை நிதிகளை செலவிட்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக விவசாயிகள் பல தடவை சுட்டி காட்டிய போதும் துறைசார் அதிகாரிகள் அசம்பந்தப் போக்கை காட்டி வருவதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |