மக்களின் பொறுப்பற்ற செயலால் ஆபத்தான நிலையில் இலங்கை - சுகாதார பிரிவு எச்சரிக்கை
வடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கோவிட் தொற்று அபாய எச்சரிக்கை
சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கோவிட் வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.
வடக்கு மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொற்று பரவல் வேகமடையலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் தித்தவேல்கல கிராமத்தில் 29 கோவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த கிராமம் நேற்று முதல் முற்றாக முடக்கப்பட்டது என அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளார்.
இந்தக் கிராமத்தில் சுமார் 540 குடும்பங்கள் வீடுகளில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும்
கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
புத்தாண்டின் போது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையினால் எதிர்வரும் வாரங்கள் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பை காண முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் இயக்குனர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் கேட்டுக்கொண்டதனை போன்று மக்கள் செயற்பட வில்லை. மக்கள் அதிகமாக ஒன்றுக்கூடினார்கள். ஒரே இடத்தில் அதிகமான மக்கள் ஒன்றுக்கூடி விருந்து வைத்து கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருந்தாலும் அவர்கள் மூலம் பலருக்கு இதன் பாதிப்புகள் உள்ளது. இதனால் எதிர்வரும் 4 வாரங்களில் இதன் ஆபத்தை அறிந்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குருணாகலை, கனேவத்தை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் தித்தவெல்காய பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனேவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.