"மட்டக்களப்பில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்! - பிள்ளையான் வெளியிட்ட தகவல்
நல்லாட்சிக்காலத்தில் களுவன்கேணி பகுதியில் 300 ஏக்கர் காணிகள் ஏறாவூர் மற்றும் காத்தான்குடியை சேர்ந்தவர்களினால் பிடிக்கப்பட்டு சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்பனை செய்த மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாகவும், அதனை அன்றிருந்த அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Santhirankanthan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியில் எரிபொருள் நிலையம் மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையங்களுடனான மீனவர் கட்டிடம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் குரூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளார்.
களுவன்கேணி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்ட கட்டிடத் தொகுதி இயங்காது வந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகக் குறித்த கட்டிடம் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு மீனவர்களுக்கான ஐஸ் மற்றும் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ளமுடிவதுடன் ஓய்வெடுக்கக்கூடிய வசதிகளும் செய்து கொடுப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களுக்கு இருக்கக்கூடிய வாழ்வாதாரத்தினை
பாதுகாத்து நம்பிக்யையேற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைச் செய்வோம் என இங்கு
உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.


