மீண்டும் காணாமல் ஆக்கப்படுவதற்கான ஆரம்பம்! எச்சரிக்கை விடுக்கும் முன்னணி அமைப்பு
இரவு வேளைகளில் சிவில் உடையில் வரும் குழுக்கள், சமூக செயற்பாட்டாளர்களை கடத்திச்செல்வது, நாட்டில் மீண்டும் காணாமல் போகச் செய்யும் செயற்பாட்டின் ஆரம்பம் என கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக போராடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
ஜூன் 25 ஆம் திகதி, சுமார் 20 பேர் கொண்ட குழு, எவ்வித காரணமும் இன்றி, பொதுமக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர், அசேல சம்பத்தை கடத்திச் சென்றதாக, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக உரையாற்றும்போது, நடந்த கடத்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சிவில் உடையில் வந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகளும், சீருடையில் இருந்த பிலியந்தலை பொலிஸின் அதிகாரிகளும் இணைந்து, அசேல சம்பத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சட்டப்படி அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
அசேல சம்பத்தின் குடும்பத்தின் தகவலுக்கு அமைய இது ஒரு கடத்தல் எனவும், எனினும் பொலிஸாரின் உத்தியோகபூர்வ கூற்றின்படி இது சட்டப்பூர்வ கைது எனவும், காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினால் கடத்தப்பட்ட சிவில் சமூக ஆர்வலர் அசேல சம்பத் ஜூன் 26ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் இலங்கை உலகில் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்ற நிலையில், அசேல சம்பத் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்ததாக, மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
1989 ஆம் ஆண்டு தெற்கில் நடந்த பயங்கரவாதம் மற்றும் முப்பது ஆண்டுகால யுத்தத்தின் அனுபவத்தில், கடத்தல்கள், காணாமல் போவதற்கான முதல் படியாகும் என சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் சுட்டிக்காட்டுகிறார்.
"இராணுவம் மற்றும் பொலிஸார் என அடையாளப்படுத்தப்பட்டவர்களால் கடத்தப்பட்டவர்கள் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொலைகள் வெளியாகாமல், எந்தவொரு தடயமும் இல்லாது காணாமல் ஆக்கப்பட்டனர். எனினும் கைது செய்ததை ஒப்புக்கொள்ளவும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசேல சம்பத்தின் குடும்பம் இன்று காணாமல் ஆக்கப்படுவதற்கான முதல் கட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபர் தற்காலிமாவேனும் காணாமல் போவது அவர்களின் உறவினர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொடூரமான குற்றவாளிகளாக கருதி இந்த கைதுகள் ஏன் இரவில் இடம்பெறுகின்றன என கேள்வி எழுப்பியுள்ள காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம், ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அசேல சம்பத் ஆகியோர் இரவில் கைது செய்யப்பட்ட விடயத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற பல சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்கிலும் பதிவாகியுள்ளதாக காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது.
நாட்டில் மீண்டும் காணாமல் போகச் செய்யும் செயற்பாட்டின் ஆரம்பமே இதுவென சுட்டிக்காட்டியுள்ள, காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம், இது சட்டரீதியாக இடம்பெற்ற கைது என ஏற்றுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண போன்றவர்கள், இவ்வாறான கைதுகளை நிராகரிப்பதற்கு எடுக்கும் காலத்தின் அளவானது, சமூகத்தில் இத்தகைய கடத்தல்கள் குறித்து பொதுமக்கள் வெளிக்காட்டும் எதிர்ப்பின் அடிப்படையிலேயே தங்கியுள்ளதாக பிரிட்டோ பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த காலத்தில் நாட்டின் பல வீடுகளில் கேட்ட கடத்தல்கள் குறித்து புலம்பல்கள் இன்று அசேல சம்பத்தின் புதல்வியிடம் ஒரு கணமாவது கேட்க முடிந்தது.
எதிர்காலத்தில் எமது வீட்டிலும் இந்த புலம்பல் கேட்காமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.”
அசேல சம்பத், நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம் ஆனால் கடத்தல் குறைந்தபட்சம் ஒரு கணமாவது இடம்பெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.