போராட்டம் தொடர்பில் முன்னரே எச்சரித்திருந்த ஜனாதிபதி சட்டத்தரணி
இந்த வருடம் ஏற்பட்ட மக்கள் பங்குபற்றிய எழுச்சிப் போராட்டம் போன்று இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் சுதந்திரத்துக்குப் பிற்பாடு ஒரு போராட்டம் நடைபெறவில்லை என்பது தனது எண்ணம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் - 19 தொற்றுகால தொடர்ந்தேச்சையான நாட்டின் முடக்க நிலை ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சி அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பிழையான அரசியல் முடிவுகள் தாக்கம் செலுத்திய பொருளாதாரக் கொள்கை காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இவற்றுக்கு மத்தியில் மக்கள் மீது சுமத்தப்பட்ட வாழ்க்கை செலவுச் சுமை போன்றவற்றால் மக்கள் தாம் தெரிவு செய்த அரசாங்கத்துக்கு எதிராக குறுகிய காலத்தில் வீதிக்கு வந்தனர்.
போராட்டக்காரர்களுக்கு மக்கள் ஆதரவு
மக்கள் பிரச்சினைகள் தொடர்ந்தும் சிக்கல் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தை 'அரகல' என்ற பெயரில் இளைஞர்களை முன்னிறுத்தி நிறுவன மயப்படுத்திய போது அவர்களது குரலை மக்கள் தமது குரலாகக் கண்டார்கள்.
அதனாலேயே மக்கள் ஆதரவு போராட்டக்காரர்களுக்குக் கிடைத்தது. 'போலின் யுகம்' தோன்றியிருக்காவிட்டால் மக்கள் வீதிக்கு இறங்கியிருக்கவும் மாட்டார்கள் அவர்கள் பெயரால் எழுச்சிப் போராட்டம் என்று ஒன்று தோன்றியிருக்கவும் மாட்டாது என்பதை மறுக்க முடியாது.
அது தற்காலிகப் பிரச்சினை தமது பிரச்சினைகள் தீர்ந்துவிட்டால் மக்கள் தம் பாட்டில் தமது வேலைகளைச் செய்யச் சென்று விடுவார்கள்.
எனவே இதில் அரசியலைப் புகுத்தி சிக்கலாக்காமல் தமிழ் தரப்பு நிதானமாகவும் அமைதியாகவும் அனைத்தையும் அவதானத்துடன் கையாள வேண்டும் என்றும் எல்லைமீறிப் போகின்ற போது அரசியல்வாதிகள் அமைச்சரவையிலும் போரட்டக்காரர்கள் சிறையிலும் இருப்பார்கள் என்று அப்போதே நான் எச்சரித்திருந்தேன்.
ஆயினும் குறை மதிப்பீடுள்ள நமது தமிழ் அரசியல் வாதிகள் சிலர் இந்தப் போராட்டத்துக்கு தமிழர் பெயரால் அரசியல் முகவரி வழங்கியபோது அதனையும் நான் கண்டித்தேன். ஏனெனில் இது எங்குபோய் முடியும் என்பதை தீர்க்கமான பார்வையுள்ள எவரும் மிக எளிதாக விளங்கிக் கொள்வர்.
ஒருகட்டத்தில் அமைதியான மக்கள் எழுச்சிப் போராட்டமான 'அரகல' மீது வன்முறை திணிக்கப்பட்ட போது அந்த வன்முறையை மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் பெயரால் பல பிரதேசங்களிலும் வன்முறையால் எதிர்கொண்டு பதில் அளித்தபோதே நிலைமை சிக்கலாகி விட்டது என்பதை விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்தது.
சாதித்த விடயம்
பலநூறு வாகனங்கள் எரிக்கப்பட்டன, எழுபதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின, மக்களில் சிலர் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உயிர் பறிக்கப்பட்டது.
மக்களின் வெற்றியாகத் தென்பட்டவன்முறை அரசியல் வாய்ப்பின்றி ஓரங்கட்டப்பட்டவராகக் கணிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ஆறாவதுமுறை பிரதமராக்கி பின்னர் பதில் ஜனாதிபதியாக்கி பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி பீடமேற்றியதை தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை.
வீதியில் திரண்டெழுந்த மக்கள் திரல் வீடுகளில் அடங்கிப் போக போரட்டக்காரர்கள் அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைக்குச் செல்ல அரசியல் வாதிகள் மெதுமெதுவாக அமைச்சர்களாகினார்கள்.
இதை ஒரு மக்கள் வெற்றி என்றே எழுச்சியோ எப்படி அடையாளப்படுத்துவது? சாத்வீகமான மக்கள் போராட்டம் எக்காரணத்தைக் கொண்டும் வன்முறையைக் கையிலெடுக்கவே கூடாது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் இம்முறை முன்னெடுக்கப்பட்ட வன்முறை போன்று ஒருநிகழ்வு இதற்கு முன்னர் இடம்பெறவில்லை அந்த வன்முறைகள் தான் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் வெற்றியா?
ஜனாநாயகத்தை ஆதரிப்போர் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்போர் நிச்சயம் இத்தகு வன்மத்தை ஆதரிக்க முடியாது அப்படியிருக்க இங்கு எதை வெற்றியென்பது? நலிந்துபோயிருந்த நாட்டின் பொருளாதாரத்தை வன்முறை இன்னும் ஆழமான பள்ளத்தில் தள்ளிவிட்டது ஏனெனில் பல்லாயிரம் கோடிவளத்தை தீ தின்று முடித்திருந்தது. இதில் எங்கிருந்து மக்கள் போராட்டத்தின் வெற்றியைத் தேடுவது?
அரசியல் ரீதியில் அற்புதமான மாற்றமொன்றை ஏற்படுத்தக் கிடைத்திருந்த மிக அழகிய சந்தரப்பத்தை பொறுப்பில்லாத முன்னெடுப்புகளால் நாசமாக்கிவிட்டார்கள். இது இந்நாட்டின் மறுமலர்ச்சிக்குக் கிடைத்தமாபெரும் அவமானமிக்க படுதோல்வியாகும் என குறிப்பிட்டுள்ளார். .