சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வெவ்வேறு முகங்களை காட்டுகிறது இலங்கை அரசாங்கம்! கடுமையான குற்றச்சாட்டு
வடக்கு, கிழக்கிலே பெருமளவு முதலீடுகளைச் செய்ய இந்தியா முன்வந்த போதும் இந்த அரசாங்கம் அதற்குத் துணையாக இல்லை, அவர்கள் இரண்டு முகத்தைக் காட்டுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சீனாவிற்கு ஒரு முகத்தையும், இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி, மாறாக எங்களுடைய தமிழர்களை தொடர்ச்சியாக நசுக்கிக் கொண்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு - வல்லிபுனம் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14.08.2026) மட்டக்களப்பில் மிக உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
படுகொலை
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாணவர்களை விடுதலைப் புலிகள் அல்லது அவங்களுடைய பாஷையிலே சொல்லப் போனால் அவர்கள் பயங்கரவாதிகள் என்ற விடயத்தை இந்த சர்வதேச அரங்குக்கு அரங்கேற்றுவதற்காக அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சு, இலங்கையினுடைய வெளியுறவுத்துறை அமைச்சு மிக பொய்யான கதைகளைக் கட்டி விடயங்களை வெளியே கொண்டுவர முயன்றார்கள்.

ஆனால் அன்றைய காலகட்டத்தில் அன்றைய அந்தத் தொண்டு நிறுவனங்கள் அங்கே இருந்தது. அந்த தொண்டு நிறுவனங்கள், இல்லை, இந்த மாணவச் செல்வங்கள் இவர்கள் வெறும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வந்திருந்தவர்கள், இவர்கள் மீது வீணாகக் குண்டடிக்கப்பட்டு இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயம் அந்தத் தொண்டு நிறுவனங்கள் வெளியே கொண்டு வந்ததால் தான் அந்த உண்மை சர்வதேசத்திற்குத் தெரியவந்தது.
இவ்வாறு எமது மண்ணிலே பல படுகொலைகள் நடந்து ஏறியிருக்கின்றது. கடந்த 77 வருடங்களாக எங்களுடைய இனம் படுமோசமாக இனவெறியாட்டத்திற்கு உட்பட்டு, சிங்கள பேரினவாத பூதம் தொடர்ந்தும் வந்தே இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதற்காக அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள். 1956ஆம் ஆண்டு எங்களுடைய தலைவர்கள், தமிழ் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழர்களுடைய பிரச்சினை
1974ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிலே எங்களுடைய தலைவர்கள், எங்களுடைய அடித்துக் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். அதேபோன்று தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஒவ்வொரு படுகொலைகளிலும் இளைஞர் யுவதிகள் குறிவைக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இங்கே இருக்கிற இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த ஜனாதிபதியும் எந்த வழியிலும் தயாரான ஒரு நிலையிலே இல்லை.
இங்கே இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற அரசியலமைப்பு, தமிழர்களையும் முஸ்லிம் மக்களையும் ஒடுக்குகின்ற ஒரு அரசியலமைப்பாக இருக்கின்றது, அது ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாக இருக்கின்றது. அனைத்து, இங்கே பல இன மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே அந்த அரசியலமைப்பு ஒரு சமஷ்டிக் கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும் என்றுதான் எங்களுடைய போராட்டம் நடைபெறுகின்றது என தெரிவித்துள்ளார்.

