வாய்மொழி உத்தரவாதத்தை நம்பி காணிகளை அளக்கவிட முடியாது! தையிட்டி உரிமையாளர்கள் திட்டவட்டம்
அரச அதிகாரிகளின் வாய்மொழி மூலமான உத்தரவாதத்தை நம்பி எமது காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது என்று தையிட்டி காணி உரிமையாளர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
தையிட்டியில் நேற்று(28) காணி அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
காணி அளவீடு இடைநிறுத்தம்
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
காணிகள் விடுவிப்பதற்கான முதற்கட்டமாகவே இந்த அளவீடு செய்யப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் எழுத்துமூல ஆவணத்தை நாங்கள் கோரினோம். அதிகாரிகள் சில கையொப்பங்களுடன் ஒரு கடிதத்தை வழங்கினார்கள்.

ஆனால், அதனை வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் தருமாறு நாம் கோரிக்கை முன்வைத்தோம். அதனை அவர்கள் வழங்க மறுத்ததாலேயே அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதிகாரிகளின் வெறும் வாய்மொழி உத்தரவாதங்களை மட்டும் நம்பி நாம் எமது காணிகளை அளக்கவிட முடியாது.
எமது காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல், வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற பலத்த அச்சம் எமக்கு உள்ளது. இதனைத் தவிர்க்கவே சட்டபூர்வமான ஆவணத்தை நாம் கோருகின்றோம்" என்று உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
"மக்களுடைய காணி மக்களுக்கே" என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் இந்த அரசு, எமது கோரிக்கையை நிறைவேற்றி உரிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.