தாய்லாந்து பிரதிப் பிரதமர் இன்று இலங்கை விஜயம்
தாய்லாந்து பிரதிப் பிரதமரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவான்கெட்கியோ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பிரதிப் பிரதமர் நாளை (21) கண்டி அஸ்கிரி மகா விகாரையில் நடைபெறவுள்ள அரச கதின புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோனின் அரச பிரதிநிதியாக அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா விலக்கு அளிப்பது தொடர்பான உடன்படிக்கையொன்றில் இலங்கையும் தாய்லாந்தும் கைச்சாத்திடவுள்ளதாகவும், இந்நிகழ்விலும் தாய்லாந்து பிரதிப் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.