நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு கணபதீஸ்வர குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றுள்ளன.
காலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று வல்லிபுர ஆழ்வார் உள் வீதி உலா வந்து பொங்கல் மற்றும் விசேட பூஜைகள் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.


வடமராட்சி மடத்தடி
இலங்கை தமிழரசு கட்சியின் தை பொங்கல் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இன்று காலை 9:30 மணியளவில் வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான m.a.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் கு.சுரேந்திரன, உப தவிசாளர் தயாபரன், பருத்தித்துறை பிரதேச சபை, பருதுத்துறை நகர சபை, வடராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்ச்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு
உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று(15.01.2026) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுளளன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளதுடன், ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.


மன்னார்
மன்னாரில் பொங்கல் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளன.
மக்கள் வீடுகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று(15.01.2026) காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.
மேலும் இந்து மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இப்படியாக, மன்னார் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலை
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமான இன்று(15.01.2026) திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளில் விசேட பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் விசேடமாக பூஜை வழிபாட்டுடன் பொங்கல் ஆரம்பமாகி, குடும்பங்களின் விசேட பூஜைகளுடன் நிறைவு பெற்றுள்ளன.
இதன்படி, திருகோணமலை- திருக்கோணேஸ்வரா ஆலயம், ஸ்ரீபத்திரகாலி அம்மாள் போன்ற ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம்
தைப் பொங்கலை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை
தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று(15.01.2026) பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது, பொலிஸ் உயரதிகாரிகள் கல்முனை ரோயல் விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

குருக்கள்மடம்
மட்டக்களப்பு - குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று(15.01.20236) நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளன.
ஆலயத்தில் கிருஷ்ண பெருமானுக்கு அதிகாலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து, விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
ஆலயப்பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் தைபொங்கல் தினத்தினை முன்னிட்டு இன்று(15) அதிகாலை இயற்கையின் முழுமுதற் கடவுளான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதுப்பானையில் மஞ்சள் கருப்பு மாவிலை கட்டி விபூதி சந்தனம் குங்குமம் சாத்தி,சக்கரை பொங்கல் பொங்கி சூரியக்கு படைத்து பூஜைகள் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
விநாயகர் வழிபாடு அலங்கார பூஜை,புஸ்பாஞ்சலி ஆகிய இடம்பெற்று சூரியனுக்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
சிறப்பு பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சற்குண சன்மதுர குருக்கள் தலைமையில் நடைபெற்றன. இந்த பூஜை வழிபாடுகளில் ஹட்டன் பகுதியை சேர்ந்த பக்த அடியார்கள் கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - மல்லிகைத்தீவு
திருகோணமலை - மல்லிகைத்தீவு அருள்மிகு ஸ்ரீ மங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் பூசை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை (15) காலை மிகவும் பக்திபூர்வமாகவும் மிகச்சிறப்பாகவும் நடைபெற்றது.

தைத்திருநாளை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பொங்கல் பொங்கப்பட்டு, சூரிய பகவானுக்கும் ஸ்ரீ மங்கேஸ்வரருக்கும் விசேட தைப்பொங்கல் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதேவேளை, மல்லிகைத்தீவு மாத்திரமன்றி திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஏனைய சகல இந்து ஆலயங்களிலும் தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.