இந்தியாவில் கைதான ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான தகவல்
இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஜெரார்ட் புஷ்பராஜை 72 மணித்தியாலங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.
ஜெரார்ட் புஷ்பராஜ் என்ற சந்தேகநபரை கைது செய்வதற்கு தகவல் அளிப்பவருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், பயங்கரவாதப்புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகநபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களின் வங்கிக்கணக்குகள் பரிசோதனை
சந்தேகநபர் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு நீண்ட நாட்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பொலிஸாரின் பிடியில் உள்ள ஏழு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த 06 பேரை இலங்கை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.
அந்த சந்தேகநபர்கள் அனைவரின் வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்க பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுள்ளனர்.
தாக்குதல் நடத்த வந்ததாக கூறி இலங்கையர்கள் நால்வரையும் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இந்திய பொலிஸார் கைது செய்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |