ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் - மகிந்த புதனன்று பேச்சு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசிடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்(Ranil Wickremesinghe) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratna) முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள பேச்சுவார்த்தைகள்
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்திய பேச்சுகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றன. அந்தப் பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் அரசுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மறுபுறம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதிக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தை அமைச்சர் மகிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார்.
அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
