பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் வசந்த முதலிகே: ஆலோசனை வழங்கிய பொலிஸ் மா அதிபர்
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் தொடர்பில் பயங்கரவாத செயல்கள் சம்பந்தமான சந்தேகம் இருக்குமாயின் அது குறித்து கண்டறிய அவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தடுப்பு காவலை நீடிக்க கோரும் பொலிஸார்
சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க விசாரணை அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியடசகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேர்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதும் மறு நாளும் கைது செய்யப்பட்ட 16 பேரில் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர், ஹஷான் குணதிலக்க ஆகியோரை 72 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர்.
ஏப்ரல் 9 ஆம் திகதி போராட்டம் சம்பந்தமாக நடந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டிருந்தது.