டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதமான கோரிக்கையை அடுத்து ஆர்க்டிக் பகுதியில் பதற்றம்
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதமான கோரிக்கையை அடுத்து ஆர்க்டிக் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் கிரீன்லாந்திற்குத் தங்களது இராணுவ வீரர்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறிய இராணுவக் குழு கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு வந்து சேர்ந்துள்ளது.
கூட்டுப் பயிற்சி
இவர்களுடன் ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இணைந்து 'Operation Arctic Endurance' என்ற கூட்டுப் பயிற்சியின் கீழ் தங்களது வீரர்களை நிலைநிறுத்தி வருகின்றன.

அமெரிக்காவிற்கு ஒரு வலுவான அரசியல் செய்தியைச் சொல்லவே இந்த வீரர்களை அனுப்பியுள்ளோம். நேட்டோ இங்கே இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த நடவடிக்கை" என்று பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒலிவியர் போயிவ்ரே டி ஆர்வோர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம்.நாங்கள் அதைக் கைப்பற்றாவிட்டால் ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதைக் கைப்பற்றும்" என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இராணுவ நடவடிக்கை
மேலும், "டென்மார்க்குடன் பேசி ஒரு தீர்வை எட்டுவோம் என்று நினைக்கிறேன். ஆனால், பேச்சுவார்த்தை பலிக்காவிட்டால் 'கடினமான வழிமுறை' (Hard way) கையாளப்படும்" என்று இராணுவ நடவடிக்கைக்கான குறிப்பையும் அவர் வழங்கியுள்ளார்.

இதேவேளை "இது 2026-ஆம் ஆண்டு. நீங்கள் மக்களுடன் வர்த்தகம் செய்யலாம், ஆனால் மக்களையே வர்த்தகம் செய்ய முடியாது" என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அமெரிக்காவின் சொத்தாகவோ அல்லது அவர்களால் ஆளப்படுவதையோ விரும்பவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் நாங்கள் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம்" என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பெடெரிக் நீல்சன் கூறியுள்ளார்.