வடமராட்சி தெற்கு பிரதேச சபையில் பதற்ற நிலை - தவிசாளரால் வரவழைக்கப்பட்ட பொலிஸார்
யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(27.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில், இவ்வாறு முரண் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பதிலளிக்க முடியாமல் திணறிய தவிசாளர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த வருடத்தின் முதல், முதல் காலாண்டில் சபையால் என்ன அபிவிருத்தி செய்தீர்கள் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளிக்க முடியாது என தவிசாளர் திண்டாடிக் கொண்டிருந்தபோது உறுப்பினரால் தனது கேள்விக்கு தவிசாளர் பதில் வழங்க வேண்டும் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.

கேள்விக்கு பொருத்தமான பதிலை தவிசாளர் வழங்காத நிலையில், உறுப்பினரின் கேள்விக்கான பதிலை வழங்காமல் இருப்பதை திசை திருப்ப உபதவிசாளர் தகாத வார்த்தைகள், அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி சபை நாகரிகத்தை மீறி நடந்து கொண்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, சபை அமர்வில் கலந்து கொள்ளச் சென்ற உறுப்பினர் ஒருவரை யாருடைய அனுமதியை பெற்று உள்ளே வந்தீர்கள் என்று வருமான வரிப் பரிசோதகர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு, வாதப்பிரதிவாதங்களும் ஓங்கியுள்ளன.
திடீரென வரவழைக்கப்பட்ட பொலிஸார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜன நாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கேள்விகளுக்கு தவிசாளர் பதில் வழங்க வேண்டும் என விடாப்பிட்டியாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக, தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்காக நெல்லியடி பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி கேட்பது தனது உரிமை என்ற விடயத்தை பொலிஸாருக்கு சுட்டிக்காட்டிய குறித்த உறுப்பினர், பதிலளிக்க வேண்டியது தவிசாளரின் கடமை என வலியுறுத்தியுள்ளார். இதனால் பொலிஸார், சமாதான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
எந்த கேள்விகளுக்கும் சரியான பதில் வழங்காத நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆகியோர் வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள்.
இதேவேளை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் செய்தி சேகரிப்பதற்கு எந்த ஒரு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.