நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் கைதானவர்கள் பொலிஸ் நிலையத்தில் (Video)
பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகரகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முதலாம் இணைப்பு
பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்கள், ஆண்கள் என அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம் செய்த தவறு என்ன என்பதை தெரிவித்து பின் தம்மை அழைத்துச் செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ள போதும் பெருந்திரளான பொலிஸார் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டு அனைவரும் பொலிஸ் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரும் நாடாளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதனை இன்று சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை கையளிக்க வந்த 13 பேர் வாயிற்படிக்கு அருகில் வந்தபோது அங்கு சென்று அந்த கடிதத்தை சபாநாயகரின் ஊடகச்செயலாளர் பெற்றுள்ளார்.
இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த 13 பேரும் கைதுசெய்யப்பட்டு மஹரகம மற்றும் வெலிக்கடை பொலிஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரித்து இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிடவேண்டும் என்று சம்பிக்க ரணவக்கவும் சஜித் பிரேமதாசவும் கேட்டுக்கொண்டனர்.




