இந்தியாவில் மீண்டும் நேர்ந்த சோகம்: கூட்ட நெரிசலில் பத்து பேர் உயிரிழப்பு
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்ட கோவிலில் இன்று (1) காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பத்து பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஏகாதசி சிறப்பு நாளை முன்னிட்டு, வெங்கடேஷ்வரா சுவாமியை தரிசனம் செய்ய, ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், கூட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்துள்ளதுடன், அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை
இதனை தொடர்ந்து, பொலிஸார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, கூட்ட நெரிசலால் சிக்கி பலர் உயிரிழந்ததை அறிந்து தான் மிகவும் வேதனையடைந்ததாக பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |