லெபனானில் இருந்து இலங்கையர்களை வெளியேற்ற தற்காலிக திட்டம்
லெபனான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளில் உள்ள இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் தற்காலிக திட்டங்களை வகுத்துள்ளது.
பிரதேசத்தில் விரோதம் அதிகரிக்கும் பட்சத்தில், இதனை செயற்படுத்தமுடியும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தாமும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரும், இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவை ஏற்பட்டால் அவர்களை திருப்பி அனுப்புவதற்கும் இணைந்து பணியாற்றி வருவதாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் பதற்றம்
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, லெபனானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இலங்கை பிரஜைகளுக்கு வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, மத்திய கிழக்கில் மாற்றமடைந்து வரும் தீவிர சூழ்நிலை காரணமாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் பரிந்துரைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |