சுழிபுரம்-பறாளாய் முருகன் ஆலய அரச மரம் விவகாரம் - நீதிமன்றம் நாடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய அரச மரத்தை எந்த ஆதாரத்தின் அடிப்படையில், சங்கமித்தவின் அடையாள சின்னமாக கருதி இலங்கை அரச பத்திரிகையான, வர்த்தமானி பத்திரிகையில் பிரசுரித்தார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் சட்டபூர்வமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
அண்மையில் சுழிபுரம் பறாளாய் ஆலயத்தில் உள்ள அரச மரத்தினை சங்கமித்தை நாட்டியதாக வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டது.
இந்த வர்த்தமானி தொடர்பான தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் முருகவேல் சதாசிவம் கோரியுள்ளார்.
இதற்காக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொல்பொருள் திணைக்கள
அலுவலகத்திற்கு இன்று(10.08.2023) நேரில் சென்று எழுத்து மூலம் தகவல் கோரியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வமான கேள்வி
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2023 பெப்ரவரி மாதம் இலங்கை வர்த்தமானி பத்திரிகையிலே பிரசுரமான "சங்கமித்தா போதியா" என்று அடையாளப்படுத்தப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுழிபுரம் - பாறாளாய் கிராமத்தில் சங்கமித்தையினுடைய அடையாளச் சின்னமான போதிமரம் காணப்பட்டதாக பிரசுரிக்கப்பட்டது.
இலங்கையிலே உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், எந்த நியாயப்பாட்டின் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அரச மரத்தை சங்கமித்தவின் அடையாள சின்னமாக கருதி இலங்கை அரச பத்திரிகையான வர்த்தமானி பத்திரிகையில் பிரசுரித்தார்கள் என சட்டபூர்வமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளேன்.
இது குறித்து பணிப்பாளர் அவர்களை கேட்டபோது, அந்த ஆலயத்தில் உள்ள குருமார்கள் தான் இதனை ஆதாரமாக கூறினார்கள் என்ற கருத்தை கூறியிருந்தார். அப்போது அந்தப் பணிப்பாளரிடம் நான் கூறினேன், சரியான ஆதாரம் இல்லாது வாய்மொழி மூலம் கிடைக்கின்ற தகவல்களை நீங்கள் எவ்வாறு அரச பத்திரிகையில் பிரசுரிப்பீர்கள்.
ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்
இது சம்பந்தமான சரியான ஆதாரத்துடன் நீங்கள் நிறுவியிருந்தால் அந்த ஆதாரத்தை எமக்கு காண்பிக்க வேண்டும். அதனை பொது வெளியில் பிரசுரிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இதற்கு எதிராக நானும், எமது மக்களும், எமது கட்சியும் இணைந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு மணி கூக்குரல் எழுப்பாமல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவலை கோரி, அந்த ஆதாரம் உண்மையா பொய்யா என்பதை ஆராய்ந்து நீதிமன்றம் சென்று அந்த அறிக்கையை மீள பெற முடியும். அதேவேளை நாங்கள் நஷ்ட ஈடு வழக்குகளையும் நாங்கள் தொடர முடியும்.
நான் அண்மையில் பத்திரிகையை பார்க்கும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கதைத்ததாக பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
நான் கேட்கிறேன், டக்ளஸ் தேவானந்தா ஒரு அமைச்சரவை அமைச்சராக இருக்கின்றார். இவ்வாறு திட்டங்கள் வரும்போது அமைச்சரவையில் பரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டும். அது சம்பந்தமாக அவருக்குத் தெரிந்திருக்கும். அது அவருக்குத் தெரியவில்லை என்றால் தங்களது சமூகம் மீதான அக்கறை அவருக்கு இல்லை.
ஆலய பூசாரிமார்களால் 2013 ஆம் ஆண்டு, இந்த தகவல்கள் தொல்லியல் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு ஆராயப்பட்டு தான் அரசு பத்திரிகையில் வந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.
அது எந்த அளவுக்கு உண்மை பொய் என நாங்கள் வரலாற்று ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





