யாழில் இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்து சம்பவம் : இருவர் உயிரிழப்பு (Video)
யாழ்.கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதுண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற 22 வயதான இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் தொழினுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இடம்பெற்ற விபத்தில் கோயில் சந்தையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாலிசந்தி வதிரி வீதியில் மாலிசந்தி நோக்கி வந்து கொண்டியிருந்த மோட்டார் சைக்கிளும், வதிரி சந்தி நோக்கி சென்றுகொண்டிருந்த பொறி ரக வாகனமும் மோதிய நிலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்துக்குள்ளான இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது உயிரிழந்துள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.