கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பொலிஸார்! வெளியான தகவல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (09.11.2022) காலை 9 மணியளவில் திடீரென கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் தங்களுடைய தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான காரியாலயத்துக்கு வருகை தரும் விமானப் பயணிகள் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அந்தப் பிரிவுக்குள் பொலிஸார் அழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சூழலில் குறித்த விடயம் தொடர்பில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸார் இருப்பதாகவும், எனினும் அங்கு வேறொரு பயிற்சி நோக்கத்திற்காகவே பொலிஸார் உள்ளதாகவும், விமான நிலையத்தில் குழப்ப நிலை காரணமாக பொலிஸார் அங்கு வரவழைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கருமபீடத்தில் நீண்ட மக்கள் வரிசை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவில் உள்ள கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் தற்போது செயல்முறையாகவே மேற்கொள்ளப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள்
இதன் காரணமாகவே விமான நிலைய குடிவரவு கருமபீடத்தில் பெரும் வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கணனி அமைப்பு கோளாறு சரிபார்க்கப்படும் வரை பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் செயல்முறையாகவே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குடிவரவு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவிக்கையில், தற்போது ஏற்பட்டுள்ள கோளாறை திருத்தும் பணிகளில் கணினி பொறியலாளர்கள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.