ஊடகவியலாளரை இலக்கு வைத்து கண்ணீர்ப்புகை தாக்குதல்
கொழும்பு - பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் இன்று மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் ஊடகவியலாளர் ஒருவரை நோக்கி கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கடந்த மே 9ஆம் திகதி குண்டர்களால் தாக்கப்பட்டதுடன் , ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த கொட்டகைகளும் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன.
சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியான நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்யக் கோரி இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொலிஸ் தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்பாட்டம் பொலிஸ் தலைமையகம் வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது. பின்னர் பொலிஸ் தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சம்பவம் தொடர்பாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை நோக்கி பொலிஸார் நேரடியாக கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதலையடுத்து பெரும் சிரமத்தை எதிர்கொண்ட ஊடகவியலாளர்கள் அவ்விடத்தை விட்டும் சற்று நேரம் அகன்று சென்று மீண்டும் களத்திற்கு திரும்பி வந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர்.



