மூன்றாவது நாளாக தொடரும் ஆசிரியர் போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு
வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாகவும் கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக இன்றும்(15) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் இன்றையதினம்(15) மதியம் ஆளுநர் செயலகத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு்ள்ளது.
முரண்பாடு
இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது.
பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் ஜெயச்சந்திரன், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் என அனைவரும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அனைவரும் கலந்துரையாடல் முடிந்து வெளியேறினர்.
இறுதியாக வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் வெளியேறியபோது போராட்டக்காரர்கள் அவரை வழிமறித்தபோது, ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கும் என்று போராட்டக்காரர்களுக்கு கூறிவிட்டு சென்றார்.
பின்னர் ஆளுநர் செயலகத்தில் அதிகாரிகள் எவரும் இல்லை என்றும், தாங்கள் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் ஆளுநர் செயலகத்துக்குள் செல்ல முயற்சித்தவேளை பொலிஸார் அவர்களை வழிமறித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எச்சரிக்கை
பின்னர் ஆளுநரின் செயலாளர், ஜோசப் ஸ்டாலின் உட்பட சிலரை அழைத்து கலந்துரையாடினார்.
இந்நிலையில் இடம்பெற்ற இடமாற்றத்தின் அடிப்படையில் செயற்படுங்கள் என ஆளுநரின் செயலாளர் கூறியதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் நாடளாவிய ரீதியாக இதற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் ஆளுநர் பின் பக்கத்தால் ஆளுநர் செயலகத்தில் இருந்து வெளியேறினார்.






தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
