ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் குறித்து எச்சரிக்கை
ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஸ்டப் பிரதேசங்களில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை 15000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டின் பின்னர் கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதி கஸ்டப் பிரதேச பாடசாலை ஆசிரியர்களுக்கு 2500 ரூபாவும் கஸ்டப் பிரதேச பாடசாலை ஆசிரியர்களுக்கு 1500 ரூபாவும் தற்பொழுது வழங்கப்படுகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளில் ஆசிரியர்களின் வாழ்க்கைச் செலவு நூற்றுக்கு ஐநூறு வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உணவு, போக்குவரத்து, ஆடைகள், வீட்டு வாடகை, ஆவணங்கள் உள்ளிட்ட ஆசிரியர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகள் வெகுவாக உயர்வடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தொலைதூரங்களிலிருந்து வந்து கொழும்பு றோயல் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கஸ்டப் பிரதேசங்களில் கடமையாற்றி வரும் ஆசிரியர்கள் இந்த நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவு தொகையை உயர்த்துமாறு 2006ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஐந்து அரசாங்கங்களிடம் கோரிக்கைகள் விடுத்த போதிலும் இதுவரையில் சாதக பதில் கிடைக்கவில்லை என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




