தனிமையிலிருந்த ஆசிரியர் தாக்கப்பட்டு கழுத்திலிருந்த தங்க நகைகள் கொள்ளை
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையிலிருந்த ஆசிரியர் ஒருவரை தாக்கி விட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் வீட்டில் தனிமையிலிருந்த நிலையில் மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய கணவர், மனைவி தலையில் காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில், கீழே வீழ்ந்து கிடப்பதைக்கண்டு அவர் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த ஆசிரியரைத் தாக்கிவிட்டு அவரின் கழுத்திலிருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



