ஆசிரிய உதவியாளர்களின் இறுதி தேர்வுக்கான முடிவுகள் தொடர்பில் ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
ஆசிரியர் பயிற்சியினை முடித்த ஆசிரிய உதவியாளர்களின் இறுதி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படாமை தொடர்பாக கல்வி அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று(29) கல்வி அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை |
அறிக்கை
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “2015 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு, வர்த்தமானியின் பிரகாரம் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு உள்வாங்கப்பட்டு ஆசிரியர் பயிற்சி நெறியை நிறைவு செய்து இறுதி பரீட்சைக்கு தோற்றிய ஆசிரியர்களின் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமைக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.
கஷ்ட பிரதேச பாடசாலைகளில் குறிப்பாக பெருந்தோட்டத்துறையில் பணிபுரியும் இந்த ஆசிரிய உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவையில் ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு இப்பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
இதுபற்றி எமது சங்கம் முன்னரும் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும், பரீட்சை திணைக்களம் இதுவரை காலமும் தமது பொறுப்புக்களை தட்டி கழித்து வந்ததன் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் மேலும் ஒடுக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, கல்விமாணி பட்ட படிப்புகளை கற்கும் வாய்ப்பினையும் இழந்துள்ளனர்.
மேலும், அவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-11 க்கு உள்வாங்கி, உரிய சம்பளத்தினை நிர்ணயித்து பயிற்சிக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த ஆசிரிய உதவியாளர்கள் உதவி தொகையாக கிடைத்த ரூ. 10,000 மட்டுமே பெற்றுக்கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்து தமது பயிற்சியை முடித்து இறுதி பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் இன்று நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் மிகவும் சிரமமான சூழ்நிலையிலும் பணிபுரியும் இந்த ஆசிரியர்களின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டு இலங்கை ஆசிரிய சேவையின் 3-1 தரத்திற்கு உள்ளீர்க்கப்பட வேண்டும்.
தொழிற்சங்க நடவடிக்கை
பெறுபேறுகளின் அடிப்படையில் உரிய சம்பள விகிதத்தில் நியமனங்கள் இடம் பெற வேண்டும். இல்லையெனில் அநீதி இழைக்கப்பட்ட இந்த ஆசிரியர்களுக்காக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடுமையாக வலியுறுத்துகின்றது.
என குறிப்பிட்டு இக்கடிதத்தின் பிரதிகள் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் போன்றோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.