ஆசிரியர் இடமாற்ற விவகாரம் : பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையினை மாகாண கல்வித்திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்து இன்றையதினம்(26) வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன் போது ஆசிரியர்கள் பலர் கூடியிருந்து சில பதாதைகளைத் தாங்கியவாறு கோசம் எழுப்பினர்.
போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும்
அத்துடன் தேவைக்குரியர் ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்தோர் நோய்வாய்ப்பட்டவர்கள் குடும்ப சூழல் காரணமாக தூர இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் என பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையீடு செய்தும் அந்த முறையீட்டினை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மாகாண கல்வி திணைக்களம் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் வடமாகண பொதுச்சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ என்பவரை சந்தித்தனர்.
அதன் போது தமக்கு மாகாண கல்வி திணைக்களம் ஊடாக எந்த ஒரு முறைப்பாடும் அனுப்பப்படவில்லை என்றும் மேன்முறையீடு அனுப்பப்பட்டால் மட்டுமே தம்மால் பரிசீலனை செய்ய முடியும் எனவும் தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது மேல்முறையீடு பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு வழங்கும் வரை தான் தற்போது பணியாற்றும் பாடசாலையிலே பணியாற்ற அனுமதி வழங்குமாறும் அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் தமது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



