மட்டக்களப்பில் மாணவியை தொந்தரவு செய்த ஆசிரியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பில் (Batticaloa) மாணவி ஒருவரை வார்த்தைகள் மூலமாக தொந்தரவு செய்து வந்த ஆசிரியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (20.08.2024) வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பில் பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவருக்கு கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகம் கொண்ட வார்த்தைகளை பிரயோகித்து வந்துள்ளார்.
ஜனாதிபதிக்கு கடிதம்
இது தொடர்பாக குறித்த ஆசிரியர், எவருக்கும் தெரிவித்து என்னை ஒன்றும் செய்யமுடியாது, உயர்தர மாணவி பாலியல் துஸ்பிரயோகம் என முகநூலில் பதிவிடுவேன் எனவும் தான் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர் எனவும் என்னை எதிர்த்தால் இந்த மாவட்டத்தில் இருக்கமுடியாது எனவும் மாணவியை அச்சுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, அவரது வகுப்பாசிரியர் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்து வந்துள்ளார். கடந்த மாதம் 11ஆம் திகதி குறித்த ஆசிரியர் பாடத்திட்டத்தில் இல்லாத படங்களை வரையுமாறும் இல்லாவிட்டால் வகுப்பறையில் இருந்து வெளியேறுமாறும் தெரிவித்த நிலையில் மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறி அதிபரிடம் முறையிட சென்றுள்ளார்.
அதிபர் இல்லாததால் வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த அநீதியை அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெற்றோர் பாடசாலை பிரதி அதிபரின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டுவந்த நிலையில், அவர் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தவுடன் பெற்றோரிடம் கடிதம் ஒன்றை வாங்கி தந்தால் தீர்வு பெற்றுதருவதாக அவர் உத்தரவளித்துள்ளார்.
இதன் பின்னர், மீண்டும் பாடசாலைக்கு மாணவி சென்ற நிலையில், குறித்த ஆசிரியர் மாணவி கல்வி கற்கும் சூழலை குழப்பிவந்துள்ளார். இதனையடுத்து, மாணவி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ஜனாதிபதிக்கு சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
மீண்டும் விளக்கமறியல்
இது தொடர்பாக ஜனாதிபதி உடன் விசாரணை செய்யுமாறு பொலிஸாருக்கு கடந்த ஜூலை 22ஆம் திகதி பணிப்புரை விடுத்ததையடுத்து, பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவியிடமும் பாடசாலை அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸ் நிலையத்துக்கு குறித்த ஆசிரியரை வருமாறு அழைக்கப்பட்டபோதும் அவர் பொலிஸ் நிலையம் செல்லாது தலைமறைவாகி வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையிலான சட்டத்தரணிகள் ஊடாக முன் நகர்வு பத்திரம் விண்ணப்பித்து நீதிமன்றில் முன்னிலையாகிய போது இன்று 20ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதவான் இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டதுடன் ஆசிரியரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
