முல்லைத்தீவில் ஆசிரியருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை : கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்
முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீடு மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் எரியூட்டப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிடுகையில்,
"வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாணவர் சமுதாயத்தை திட்டமிட்டு சீரழிக்கும் செயற்பாடுகளுக்கு துணை நின்ற அரசாங்கங்களும் நெறிபிறழ்வான கலாசாரங்களையும் போதைபொருள் பாவனையையும் வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருக்கும் பொலிஸாரினதும் செயற்பாடுகள் தான் இன்று ஆசிரியர்கள் கூட பாதுகாப்பாக வாழ முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்
அதுமாத்திரம் அல்லாமல், நெறிபிறழ்வான நடத்தை உள்ளவர்களையும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களையும் வலயக் கல்விப் பணிப்பாளர்களாக தொடர்ந்தும் பணியாற்ற அனுமதித்த அதிகாரிகளினதும் - ஆட்சியாளர்களதும் - அமைச்சர்களதும் அரசியல் தலையீடுகளுமே கல்விப் புலத்தை சீரழித்து வருகின்ற மற்றுமொரு காரணியாகும்.
அத்தகைய முறையில் செயற்படும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரினால் சீரழிந்து கொண்டிருக்கும் கல்வி வலயங்களில் முல்லைத்தீவு கல்வி வலயமும் ஒன்றாகும்.
முல்லைத்தீவு - முள்ளியவளை தேசிய பாடசாலையின் அதிபரின் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக் நீண்ட காலங்களாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ள போதிலும், அவை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததன் முரண்பட்ட நிலையே இன்று ஆசிரியர் ஒருவரின் சொத்துக்களை அழித்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது.
குறித்த அதிபரின் முறைக்கேடுகள் குறித்து பாடசாலை ஆசிரியர்களும், இலங்கை ஆசிரியர் சங்கமும் வலக்கல்விப் பணிப்பாளர் - மத்திய மற்றும் மாகாண கல்வியமைச்சுக்களின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்த போதும் நடவடிக்கை எடுக்காதிருந்ததன் விளைவே இந்தப் பாரதூரமான சம்பவத்துக்குப் பிரதான காரணமாகும்.
வலயக்கல்வி பணிப்பாளர்
இந்த விளைவுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினர் அனைவரும் பொறுப்பு கூறவேண்டும்.
முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அதிபர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மூடிமறைத்து துணை நின்ற முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் மத்திய கல்வியமைச்சின் தமிழ் மொழிப்பிரிவின் பணிப்பாளர்கள் மற்றும் மத்திய கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்டோரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பாரதூரமான இந்த விளைவுக்குக் காரணமாகும்.
அதுமட்டுமல்ல நெறிபிறழ்வு செயற்பாட்டில் ஈடுபட்ட ஒருவர் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வரும் நிலையில், அவற்றை நன்கு அறிந்திருந்தும் அவரை வழிப்படுத்த முடியாது துணைநின்ற கல்வியமைச்சின் அதிகாரிகள், வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளும் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு பாடசாலை அதிபரின் தொடர்ச்சியான செயற்பாடுகளே பிரதான காரணமாய் அமைந்ததென்பதும் குறித்த பாடசாலையில் அதிபர் ஆசிரியர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முரண் நிலைகளின் நியாயமான காரணங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாக இருந்தால் இத்தகைய சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடாகும்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், வடக்கு மாகாண ஆளுநரும், திணைக்கள அதிகாரிகளும் உரிய நீதியை ஆசிரியருக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் அதிபர் உடனடியாக இடமாற்றப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், குறித்த அதிபர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்க துணைநின்ற முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்” என கூறியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |