வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேயிலை சாயம்: நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவின்படி, அழிப்பதற்கு தயாரான வெளிநாட்டு மதுபான போத்தல்கள், தேயிலை சாயம் மற்றும் நீர் கலந்த திரவமாக மாற்றப்பட்டமைக்கு காரணமானவர்களை கண்டறிய, அரச இரசாயன பகுப்பாய்வாளரிடமிருந்து அறிக்கையைப் பெறுமாறு கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி நேற்று(01) கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு (CCD) உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 81 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 150 பியர் போத்தல்களை ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு பிரதான் நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேகர, இந்த மதுபான போத்தல்களை அழிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
உடனடி விசாரணை
இருப்பினும், அழிக்கும் பணியின் போது, அதில் உள்ளவை உண்மையான மதுபானங்களாகத் தெரியவில்லை என்பதை நீதவான் அவதானித்துள்ளார்.
இதன் விளைவாக, போத்தல்கள் மீண்டும் சீல் வைக்கப்பட்டு நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் அறையில் மீண்டும் சேமித்து வைக்க உத்தரவிட்டப்பட்டது.
இந்தநிலையில், மதுபானத்தை நீர் மற்றும் தேயிலை சாயம் கலந்த திரவமாக மாற்றியவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




