உலக முதலீட்டாளர்களை குறிவைக்கும் இலங்கை - துறைமுக நகரில் குவியும் பில்லியன் டொலர்கள்
புதிய வரி சீர்திருத்தங்களின் பின்னணியில், இதுவரை கொழும்பு துறைமுக நகரில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை பெற்றுக்கொள்வதை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய முதலீடு
இந்த இலக்கை அடைவதற்காக தற்போது இரண்டு பாரிய வீடமைப்புத் திட்டங்கள், நவீன ஹோட்டல் ஒன்றின் திட்டம் மற்றும் மாநாட்டு மையம் ஒன்றை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில், துறைமுக நகரம் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பல முக்கிய முதலீடுகளும் உள்ளடங்குவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய முறை
துறைமுக நகரில் வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை சர்வதேச தரங்களுக்கு ஏற்பவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதன்மை முதலீடுகளுக்கு 15 முதல் 23 ஆண்டுகள் வரையிலான வரிச் சலுகைகளும், இரண்டாம் நிலை முதலீடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு குறைந்த வரி விகிதமும் வழங்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முதலீடுகள் அனைத்தும் இலங்கை முதலீட்டு சபை (BOI) ஊடாக கிடைக்கும் முதலீடுகளுக்கு மேலதிகமானவை எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வரிச் சலுகைகள் மட்டுமன்றி, நிலைத்தன்மை, நம்பிக்கை, தொடர்பாடல் மற்றும் தெளிவான பொருளாதார நோக்கு ஆகியவையும் முக்கியமானவை எனவும், தற்போதைய அரசாங்கம் இத்தகைய முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.