திடீரென்று நடுவானில் மாயமான விமானம்!
பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் ஒன்று திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானமானது சனிக்கிழமை(2) மதியம் 12.45 மணிக்கு ஜோர்ஜ் டவுன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, விக்டோரியாவிற்கும் பின்னர் மத்திய NSWக்கும் புறப்பட்டது.
மாயமான விமானம்
விமானத்தில் இருந்த விமானி 70 வயது முதியவர் என்றும், அவரது பயணி 60 வயதுடைய ஒரு பெண் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த தம்பதியினர், நியூ சவுத் வேல்ஸில் உள்ள குடும்பத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தபோது, பாஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது அவர்களின் விமானம் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தம்பதியினர் சேருமிடத்தை அடையாததால் குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் தொடங்கப்பட்டது.
விமானம் காணாமல் போவதற்கு முன்பு எந்த வானொலி தொடர்பும் அல்லது மேடே அழைப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தேடல் தீவிரம்
அந்த விமானி "மிகவும் அனுபவம் வாய்ந்தவர்" என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் பயணித்த அந்த விமானமானது அவருக்கு ஒப்பீட்டளவில் புதியது என்று தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் தற்போதைய உரிமையாளரும் விமானியும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்புதான் அந்த விமானத்தை வாங்கியுள்ளனர்.
விக்டோரியா மற்றும் டாஸ்மேனிய காவல்துறையினர் பாஸ் நீரிணை மற்றும் தெற்கு விக்டோரியாவில் தங்கள் தேடலை மையப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, காணாமல் போன விமானத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து தேடுதலுக்கு உதவுமாறு பொலிஸ்துறை ஆய்வாளர் கிளார்க் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




