சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பணிப்பு(Photos)
திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைச் சட்டத்தின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும்,ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல உரிய அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
திருகோணமலையில் ஒரு சில விசமிகள் மேற்கொண்டு வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று (22) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மீனவ சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கருத்திற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராளவின் ஏற்பாட்டில் இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைச் சட்டத்தின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தடைசெய்யப்பட்ட சுறுக்கு வலை மற்றும் டைமனைட் பாவனை காரணமாக மீன்வளம் அழியக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். துறைசார் அதிகாரிகள் சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் ஒரு சில விசமிகள் சூட்சமமான முறையில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் இதன்போது வேண்டிக்கொண்டனர். இதற்கிணங்க இன்று முதல் இரண்டு வாரங்கள் வரை சட்டவிரோத மீன்பிடியைத் தடுத்து நிறுத்த விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
முப்படை மற்றும் பொலிஸார், உரிய திணைக்கள தலைவர்கள் இணைந்து இச்சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் உரிய பிரதேசங்களில் மீனவ சங்கங்களை இது தொடர்பில் தெளிவுபடுத்துவதெனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை உரிய தரப்பினரிற்கு வழங்குமாறும் இதன் மூலம் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்றும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டிக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், கடற்படை, பொலிஸ்
,உரிய திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.



