கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
கட்டார் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
கட்டார் அரசுக்குச் சொந்தமான கட்டார்எனர்ஜி நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட 'அக்வா 1' (Aqua 1) என்ற எண்ணெய் கப்பல் மீது, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கட்டார் பாதுகாப்பு அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணைகளில் இரண்டைக் கட்டார் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்த நிலையில், மூன்றாவது ஏவுகணை அக்வா 1 கப்பலைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலில் கப்பலின் மேற்பகுதி சேதமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமோ அல்லது கடலில் எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று கட்டார்எனர்ஜி மற்றும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பொறுப்பேற்றுள்ளது.
இக்கப்பல் இஸ்ரேலுடன் தொடர்புடையது என்பதால் இதனைத் தாக்கியதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. கட்டாரின் ராஸ் லாஃபன் எரிவாயு மையத்திற்கு மிக அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருவதால், கடல்சார் போக்குவரத்து பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஈரானின் இத்தகைய தொடர் நடவடிக்கைகளால் கட்டாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறன் 17% வரை பாதிக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.