தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : சாணக்கியன் வேண்டுகோள்
ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமாகயிருந்தால் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக முடிவுகளை தமிழர்களை வழிநடத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நிறைவேந்தல் நிகழ்வின் இறுதி நிகழ்வு மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னாரின் சமாதியில் உணர்புவூர்வமாக நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய சாணக்கியன்,
நிரந்தர அரசியல் தீர்வு
இந்த மண்ணில் தமிழ் மக்கள் ஒரு கௌரவமான வாழ்க்கையினை வாழவேண்டும் என்பதற்காகவே அன்னை பூபதி 36வருடங்களுக்கு முன்னர் தனது உயிரை தியாகம் செய்தார்.
அன்னையின் இந்த தியாகத்திற்கு ஒரு அர்த்தம் இருப்பதாகயிருந்தால் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எமக்கு அனைவருக்கும் முன்பாகவுள்ள கடமையாகும்.
அந்த வகையில் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த ஆண்டு ஜனாதிபதிதேர்தல் ஒன்று நடைபெறவிருக்கின்றது. தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் மட்டங்களில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து பேசுவது,தமிழர்கள் குறித்து சிந்திப்பது, தமிழர்கள் பேசுபொருளாக மாறுவது இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில்தான்.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கயிருக்கும் ஆண்டு.அவ்வாறு நடக்குமானால் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியதான முடிவுகளை தமிழ் மக்களை வழிநடாத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுப்பதுதான் இந்த தாயின் தியாகத்திற்கு நாங்கள் செய்யக்கூடிய விடயம்.
இந்த வருடத்தில் சிறந்த ஒரு தீர்மானத்தை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கவேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |