கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்றில் அம்பலமான தகவல்
கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள், கொழும்பின் காககைத் தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியலை காண்பிக்கச் சென்றபோது, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருந்தனர்.
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் இறந்தமை தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (14) கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, கொட்டாஞ்சேனை பொலிஸ் தலைமை ஆய்வாளர் லியனாராச்சிகே ரவி சமந்த சாட்சியமளித்தமை பின்வருமாறு அமைந்திருந்தது.
“கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் பிலியந்தலையைச் சேர்ந்த அசோக லக்மல் ஜெயவர்தன.அவர் இராணுவத்திடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்.
துபாயை தளமாகக் கொண்ட நபர்
மற்றொரு சந்தேக நபர் விஜய குமார் பிரகாஷ் என்றும் அடையாளம் காணப்பட்டார்.
இந்தக் குற்றத்தை துபாயை தளமாகக் கொண்ட 'ஷிரன் பழனி' என்ற நபர் திட்டமிட்டு நடத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, மட்டக்குளிய பகுதியில் பல ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.
அதன் பிறகு, அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இரண்டு சந்தேக நபர்களும் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் குழுவுடன் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்த நேரத்தில் அடர்ந்த இருள் நிலவியது, சந்தேக நபர்கள் காட்டிய இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் ஒரு வெள்ளைப் பை கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு
இதன்போதே இரண்டு சந்தேக நபர்களும் தன்னுடன் சண்டையிட்டனர். சண்டையின் போது தான் வைத்திருந்த துப்பாக்கி அவர்களின் வசம் சென்றது.
அந்த நேரத்தில், லக்மல் ஜெயவர்தன என்ற சந்தேக நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியைத் கைப்பற்றியமையை அவதானிக்க முடிந்தது.
எனவே அவர், "ஆயுதத்தை எடு" என்றார். "சுடு!" என்று நமன் கத்தினார். ஒரே நேரத்தில் பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டது. பின்னர் ஜெயசங்க என்ற அதிகாரி சந்தேக நபர்களைச் சுட்டதாகத் தெரியவந்தது.
சந்தேக நபரான லக்மல் ஜெயவர்தன இராணுவத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி பெற்ற நபர் என்பதால், இந்த துப்பாக்கி அவரது கை வசம் தொடர்ந்து இருந்திருந்தால், அவர் எங்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றிருப்பார்.
சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால், இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்த்திருக்கலாம்.
இந்த சம்பவத்தின் போது பொலிஸ் கான்ஸ்டபிள் மதுசங்கவின் கால்களிலும் காயம் ஏற்பட்டது.
சந்தேக நபர்களும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரியும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் உயிரிழந்தனர்” என்றார்.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்திற்கு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, இதுபோன்ற சந்தேக நபர்கள் அழைத்துச் செல்லப்படும்போது, அந்த நிகழ்வை காணொளியாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதன்படி, சாட்சியமளித்த தலைமை பொலிஸ் ஆய்வாளரிடம், சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டதா? என்று சட்டத்தரணி கேளடவி எழுப்பியுள்ளார்.
மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள்
இதற்கு பதில் வழங்கிய ஆய்வாளர், "என்னால் அப்படி ஒரு காணொளியை பதிவு செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பகிரங்கமானது.
அதன்படி, அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை உடனடியாகக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவற்றை வேறொரு தரப்பினர் பெற்று, குற்றச் செயல்களில் பயன்படுத்தியிருக்கலாம்.
அந்த சூழ்நிலையில் காணொளியை பதிவு செய்ய முடியவில்லை.
இதுபோன்ற ஒரு காணொளியை பதிவு செய்ய வேண்டும் என்றால், பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் உதவியை நாட வேண்டும்.
ஏற்பட்ட அவசரகால சூழ்நிலை காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் போனது” என ஆய்வாளர் பொலிஸ் ஆய்வாளர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
அப்போது சட்டத்தரணி ஒரு கேள்வியை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பொலிஸாரினால் கைவிலங்கு போடப்பட்டதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து ஆயுதங்களை அவர்கள் எவ்வாறு கைப்பற்றியிருக்க முடியும்? என்பது சந்தேகமாக இருப்பதாகவும் கூறினார்.
பதில் வழங்கிய ஆய்வாளர்
இதற்கு பதில் வழங்கிய ஆய்வாளர், "ஒரு கைவிலங்கின் ஒரு முனை ஒரு சந்தேக நபரின் கையிலும், மற்றொரு முனை மற்றொரு சந்தேக நபரின் கையிலும் போடப்பட்டிருந்தது” என பதில் வழங்கியிருந்தார்.
எனவே இரண்டு சந்தேக நபர்களில் ஒருவரின் ஒரு கை சுதந்திரமாக இருந்தது. அதனால் அவர்களால் இதனை செய்ய முடிந்தது என்று தலைமை பொலிஸ் ஆய்வாளர் கூறினார்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பில் மேலும் சாட்சியங்களைப் பதிவு செய்வது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டைமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |