அநுர அரசாங்கம் மீது தமிழருக்கு நம்பிக்கை : அவுஸ்திரேலிய தூதுவரிடம் வடக்கு ஆளுநர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித பெறுமதிசேர் செயற்பாடுகளுமின்றி
இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் குறித்தும் ஆளுநர் தெளிவுபடுத்தினார்.
"வடக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் மிகுந்த வளமுடையவை. ஆனால், இவை எவ்விதப் பெறுமதிசேர் செயற்பாடுகளுமின்றி மூலப்பொருட்களாகவே இங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றன.

வடக்கில் இவற்றைப் பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் இல்லை. போருக்கு முன்னர் இயங்கிய தொழிற்சாலைகளும் தற்போது இல்லை. எனினும், தற்போதைய அரசு இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
வடக்கு மாகாணத்தில் மூன்று விசேட முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறைசார் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை வழங்கவுள்ளன.
அதேவேளை, ‘த மனேஜ்மன்ட் க்ளப்’ அமைப்பால் வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது.
இவை சாதகமான சமிக்ஞைகளாக அமைந்துள்ளன" என்றும் ஆளுநர் கூறினார்.
கடந்த கால ஆட்சியாளர்களால்
தொடர்ந்து காணி விவகாரம் குறித்துப் பேசிய ஆளுநர், "கடந்த காலங்களில் மக்களின் வாழ்விட மற்றும் விவசாயக் காணிகள், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தன்னிச்சையாகப் பறிக்கப்பட்டன.

அவற்றை மீள மக்களுக்கே வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு ஆரம்பித்துள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களைச் சந்தித்திருந்தனர்.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தமிழ் மக்கள் நம்புகின்றனர். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர்" என்று சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



