சொந்த நாட்டிலேயே தமிழர்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அவலம்: ரவிகரன் விசனம்
எங்களுடைய இடத்தில், எமது மக்கள் தமது வழிபாட்டினை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்நிலையில் எத்தகைய கொடிய அரசின்கீழ் எமது தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை உலகநாடுகள் பார்க்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த பிக்குகளும், பெரும்பாண்மை இனத்தவர்களும் பெருமளவில் குருந்தூர்மலை பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.
நாம் பொங்கல் வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தபோது, பெரும்பாண்மை இனத்தவர்களும், பௌத்த தேரர்களும் எமது பொங்கல் வழிபாட்டுக்குரிய செயற்பாடுகளைக் குழப்புகின்றவகையில் செயற்பட்டனர்.
வழிபாடுகளை மேற்கொள்ள நிபந்தனைகள்
இந்நிலையில் அங்கு கடமையிலிருந்த பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியவாறு இருந்தது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நாம் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தனர்.
அந்தவகையில் தொல்லியல் பிரதேசத்திற்குள் 'தீ' வைக்க முடியாது எனக் கூறிய தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், நிலத்திலே தகரங்களை வைத்து, அதன்மேல் கற்களை வைத்து, கற்களின்மேல் தகரங்களை வைத்து தீவைத்து பொங்கல் மேற்கொள்ள முடியுமென நிபந்தனைகளுடன் பொங்கல் வழிபாட்டிற்கு அனுமதித்திருந்தனர்.
எனவே தொல்லியல் திணைக்களத்தினுடைய நிபந்தனைகளுக்கு அமைவாக, பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம்.
கொடுமையான அரசாங்கம்
அப்போதும் அங்கிருந்த பெரும்பாண்மை இனத்தவர்களாலும், பௌத்ததேரர்களாலும் அங்கு எமது பொங்கல் வழிபாடுகளுக்கு குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.
இந் நிலையில் பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகவே பொலிஸாருடைய செயற்பாடுகள் காணப்பட்டன.
பொலிஸாருடைய செயற்பாடுகள் மிக மோசமாக காணப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பலதடவைகள் இந்த நாட்டிலே நடைபெற்றிருக்கின்றன.
இருப்பினும் சர்வதேசநாடுகள்கூட தொடர்ந்தும் இவற்றை வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான கொடுமையான அரசாங்கத்தின் கீழ்தான் எமது மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை இந்த உலக நாடுகள் பார்க்கவேண்டும்.
எம்மால் இங்கு வழிபாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் நாம் இதனை இவ்வாறே விட்டுவிடப்போவதில்லை. நாம் தொடர்ந்தும் இங்கு வந்து எமது வழிபாடுகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |