தமிழரசுக் கட்சியின் தீர்மானம் குறித்து தொடர்ந்து எழும் அதிருப்தி கருத்துக்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் நேற்று (03.09.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல. இவ்விடயம் தொடர்பில் வட்டாரங்களிலுள்ள மக்கள், புத்திஜீவிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் எம்மை அடிக்கடி தொடர்பு கொண்டு ஏன் இவ்வாறான முடிவை எடுத்தீர்கள், கட்சி ஏன் இவ்வாறான முடிவுக்குச் செல்ல வேண்டும்.
தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற போது சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஏன் வாக்களிக்கத் தூண்ட வேண்டும். எதன் அடிப்படையில் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது? போன்ற கேள்விகளை கேட்கின்றார்கள். அதற்கு பதிலளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளேன்.
அனேகமான மக்கள் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வதாக இல்லை.எமது மக்கள் பொது வேட்பாளரை நூறுவீதம் ஆதரிக்க வேண்டும் என்ற செயற்பாட்டில் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், எமது கட்சி அங்கத்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஏன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என்பதை கட்சி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அதிகளவானோர் பங்குபற்றியிருக்க வேண்டும். அக்குழுவில் 43 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் அன்றைய தினம் கூட்டத்தில் 23 பேர் மாத்திரமே பங்கு பற்றியிருந்தனர். அதிலும் 19 உறுப்பினர்கள் தான் அவர்களது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
சிங்கள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பரிசீனை செய்து தமிழ் மக்களுக்கான சார்பு விடயங்கள் எங்கு காணப்படுகின்றதோ, அதனடிப்படையில் மக்களை வாக்களிக்கத் தூண்டலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார். எமது கட்சிக்கும் சஜித் பிரேமதாவிற்கும் இடையிலே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இருக்கின்றதா?
ஒப்பந்தம்
அவ்வாறெனில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன? அதில் தமிழர்களுக்கான உரிமைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை மத்தியகுழுவில் தீர்மானம் மேற்கொண்டவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
இதற்கு எமது கட்சியிலுள்ள மத்திய குழுவில் உள்ளடங்குகின்றவர்கள் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும். புத்திஜீவிகள், சிவில் அமைப்பினர், தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற சுமார் 7 கட்சிகள் இணைந்துதான் பொது தமிழ் வேட்பாளரை களமிறக்கியுள்ளார்கள்.
இந்த அமைப்புக்களுடன் தமிழரசுக் கட்சியையும் இணையுமான அழைப்பு விடுக்கப்பட்டபோதும் எமது கட்சியின் பக்கமிருந்து அவர்களுக்கு தகுந்த பதில் வழங்கவில்லை. இதுவும் ஒரு பிழையான விடையமாகும். இதற்கான காரணத்தை எமது கட்சியினர் அந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
“மக்களுக்காகத்தான் நாங்கள், எங்களுக்காக மக்கள் இல்லை.” எனவே எம்மவர்களின் முடிவின் பிரகாரம் சஜித் பிரேமதாச பாவம். இலங்கைத் தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள் அவருடன் இணைவதால் பெரும்பான்மை சமூகம் ஒரு மாற்று நடவடிக்கை எடுப்பதற்குரிய வசதி ஏற்படுத்தப்படும்.
அதனடிப்படையில் இது சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் ஒரு வியூகமாகவும் இது இருக்கலாம். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க தந்திரத்தில் சாத்தியவான். அவர் இவ்வாறான திட்டத்தை வகித்திருக்கலாம்.
அதற்கு இவர்களும் துணை போயிருக்கலாம் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. ஏனெனில் சஜித் பிரேமதாசவுக்கு என்ன காரணத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள் இற்றைவரையில் யாரும் எந்த ஊடகத்திலும் சொல்லவில்லை.
எது எவ்வாறு அமைந்தாலும் எமது கட்சியைச் சேர்ந்த இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்திற்கு மக்கள் அனைவரும் இம்முறை வாக்களித்து தமிழ் மக்களின் ஒன்றுமையை நிருபிக்க வேண்டும்” என கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |