எமிரேட்ஸில் தமிழ் இளைஞன் ஒருவருக்கு மரண தண்டனை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அஜ்மான்(Ajman) மாநிலத்தில் கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இளைஞன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், இறந்தவரின் வயிற்றில் இருந்த கத்தியை அகற்றி அவரை வைத்தியசாலையில் அனுமதித்திருந்ததாகவும் அவரது வழங்கறிஞர் சகாப்தீன் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கண்டியை சேர்ந்த தெய்வேந்திரன் நிக்லஸ் என்ற இளைஞனுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் எட்டு வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது என்றும், அஜ்மான் பணத்தில் இரண்டு இலட்சம் டிர்ஹாம் (Dirham) பணம் செலுத்தினால் மாத்திரமே மரண தண்டனையில் இருந்து குறித்த இளைஞனைக் காப்பாற்ற முடியும் என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
பின்னணி
கொலை நடந்த இடத்தில் இருந்த மூன்று சிங்கள இளைஞர்கள் சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களில் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர் என்றும், அவர்கள் கொலை நடந்தமை தொடர்பான பிரதான சாட்சியாளர்கள் எனவும் விபரித்த சட்டத்தரணி சகாப்தீன், இந்த இளைஞன், கொலை செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாமையினால் அஜ்மான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததாகவும் விளக்கமளித்தார்.
அதாவது, கத்தியால் குத்தப்பட்டு குற்றுயிராக இருந்தவரை காப்பாற்றும் நோக்கில் கத்தியை வயிற்றில் இருந்து அகற்றிவிட்டு இரத்தம் வழிந்தோடாமல், துணிகளால் கட்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.
இதனால் நடந்த உண்மையை தமிழ் இளைஞன் வைத்தியர்களுக்கும் பொலிஸாருக்கும் விளக்கியிருக்கிறார்.
ஆனால், கத்தியில் இளைஞனின் கைரேகை இருந்த காரணத்தை ஆதாரமாக எடுத்து அஜ்மான் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறிய சட்டத்தரணி, குறித்த சம்பவ இடத்தில் இருந்த பாகிஸ்தானியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அந்த பாகிஸ்தானியர் தான் கொலை செய்தவர் என்றும், இருந்தாலும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியிலும் கொல்லப்பட்டவரின் உடலிலும் தமிழ் இளைஞனின் கைரேகை இருந்த காரணத்தால், அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக சட்டத்தரணி கூறினார்.
எட்டு வருடங்களாக நடைபெற்ற விசாரணையில் தான் கொலை செய்யவில்லை என்று குறித்த பாகிஸ்தானியர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வாக்குமூலம் வழங்கியிருந்தார். ஆனாலும், கொலையை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாகவும் சட்டத்தரணி கூறினார்.
தகராறுகள்
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த சட்டத்தரணி சகாப்தீன், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞன் 2018ஆம் ஆண்டு அஜ்மான் மாநிலத்துக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருக்கிறார்.
மரண தண்டனைக்கு உள்ளான இளைஞன் தங்கியிருந்த இடத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவரும் நான்கு சிங்கள இளைஞர்களும் மற்றும் சில பாகிஸ்தானியர்களும் தங்கியிருக்கின்றனர்.
கொலையுண்ட மாத்தளையைச் சேர்ந்த அந்த முஸ்லிம் இளைஞனை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியரே கத்தியால் குத்தியிருக்கிறார். அவர்களுக்கிடையில் தகராறுகள் இருந்திருக்கின்றன.
ஆனால், கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட தெய்வேந்திரன் நிக்லஸ், அந்த முஸ்லிம் இளைஞனின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியை ஒரு கையால் அகற்றி மறு கையால் துணியைப் பிடித்துச் சுற்றிப் பின்னர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
சம்பவத்தை அறிந்து கொண்ட அங்கு தங்கியிருந்த மூன்று சிங்கள இளைஞர்களும் கொலை நடைபெற்று நான்கு நாட்களில் தங்கள் விசாக்களை இரத்துச் செய்து விட்டு இலங்கைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
ஆனால், இவர்கள் சாட்சியமளிப்பார்கள் என்ற அச்சத்தினால் குறித்த மூன்று இளைஞர்களுக்கும் பெருமளவு பணத்தைக் கொடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியர் முன்கூட்டியே அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
மரண தண்டனை
தப்பிச் சென்ற இளைஞர்களில் ஒருவரின் முகநூலைக் கண்டு பிடித்து அதில் இருந்த தொலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, அந்த முகநூல் முடக்கப்பட்டு தொலைபேசியும் செயலிழக்கப்பட்டிருந்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் ஓமானில் பணிபுரிகிறார். அவருடைய சகோதரி தனது சகோதரனை பார்வையிட தற்போது அஜ்மான் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இவர்கள் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தான் உழைத்த இரண்டு இலட்சம் டிர்ஹாம் பணத்தை தருவதாக தாயார் கூறியுள்ளார். ஆனால், அவ்வளவு பெரும் பணத்தை அவரால் செலுத்த முடியாது என்று சட்டத்தரணி விபரித்தார்.
அதேநேரம், சுற்றுலா விசாவில் எவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டாம் எனவும் அவர் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். இந்த நாடுகளின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை என்றும் உரிய ஆதாரங்கள் இல்லையானால் நிரபராதியாக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
எனவே, இயலுமானவர்கள் இந்த இளைஞனை விடுவிக்க உரிய பணத்தை வழங்கி உதவுமாறு சட்டத்தரணி சகாப்தீன் வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு இலட்சம் டிர்ஹாம் பணத்தை செலுத்த நீதிமன்றத்தில் நான்கு மாத கால அவகாசம் கேட்டதாகவும், ஆனாலும் மூன்று மாதங்கள் கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, மூன்று மாதங்களில் குறித்த நிதியை வழங்கத் தவறினால் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது உறுதி என்றும் கவலையுடன் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |