மக்களுக்கு போதையூட்டும் தமிழ் அரசியல்வாதிகள் - டக்ளஸ் தேவானந்தா
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு போதையூட்டக்கூடியவாறு செயற்படுகின்றார்கள் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.வேலனை பிரதேச செயலகத்தில் இன்று(28.04.2023) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வறிய மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 இலட்சம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ எடையுடைய அரிசி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மக்களுக்கு பாரபட்சமற்ற விதத்தில் ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார்.
வட மாகாணத்தை பொறுத்தவரையில் இலங்கையினுடைய ஏனைய மாவட்டங்களைவிட இந்த திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களின் பிரச்சினைகள்
வடக்கு பிரதேச மக்கள் பல காலங்களாக யுத்தத்தில் பல விதமான பிரச்சினைகளை எதிர்க்கொண்ட நிலையில் இதுமட்டுமின்றி கோவிட் தொற்று மற்றும் பொருளாதார சிக்கல் போன்ற பல்வேறுபட்ட சிக்கல்களை முகம் கொடுக்க நேரிட்டது.
இதன்போது இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்தபோது நாட்டை தலைமை தாங்கி பாதிப்பில் இருந்து மக்களை மீட்க யாரும் முன்வரவில்லை.எல்லோரும் பின்வாங்கிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் சார்பாக முன்வந்ததற்காக அவருக்கு நான் பாராட்டை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
ஜனாதிபதிக்கு பாராட்டுக்கள்
நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையின் தமிழர் நிலங்கள் சீனாவுக்கு அளிக்கப்படுவதாக சுமத்திய குற்றச்சாட்டில் எந்தவித நம்பகத்தன்மையும் இல்லை.
பொய்யான வதந்திகளை கூறி மக்களை பிழையான வழியில் அரசியல்வாதிகள் நடத்துகின்றனர். மக்களிடத்திலிருந்து வாக்குகளை அபகரிக்கும் நோக்கத்திற்காகவே இவ்வாறான தகவல்களை வெளியிடுகின்றனர். இது போன்று அரசியல்வாதிகள் வெளியிடும் தகவல்கள் மக்களுக்கு போதையூட்டும் வண்ணமாகவே அமையும் எனவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.