தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளப்படவில்லை : டக்ளஸ் குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால்தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பகுதிக்கு நேற்று (04.05.2024) நேரில் விஜயம் செய்து அப்பகுதி கடற்றொழிலாளர்களின் குறை நிறைகளைக் கேட்டறித்து கொண்டார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சுருக்குவலைப் பயன்பாடு
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சுருக்குவலைப் பயன்படுத்துதல் கிழக்கில் மாத்திரமல்ல நாடு பூராகவும் பரந்துபட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது.
நான் செல்லும் இடம் எனலாம் அதனைத் தடை செய்யுமாறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவரையில் சுருக்குவலைப் பயன்பாட்டைத் தடை செய்வதற்குரிய நடவடிக்கையை நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன். அதுபோல் மட்டக்களப்பு வாவியிலும் தொழில் செய்பவர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
அதற்குத் தீர்வு காணும் முகமாக ஒரு மாத்திற்குள் ஒரு குழுவை அமைத்து அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்கள். அதனை வைத்துக் கொண்டு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் என்பது இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனையாகும். இது தொடர்பில் நாம் போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு
அதுபோல் சட்டநடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றோம். இன்னும் பேச்சுவார்த்தைகளில் முழு நம்பிக்கை வைத்து முயற்சிகளை எடுத்துள்ளோம். தற்போது கடற்றொழிலாளர்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இரண்டு மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு வரவில்லை.
தேர்தல் முடிந்தவுடன் கூடிக் கதைக்கலாம் என அண்மையில் தமிழ்நாட்டு முதலமைச்சரிடமிருந்தும், புதுச்சேரி முதலமைச்சரிடமிருந்தும் எனக்கு அமைப்பு வந்திருந்தன. அதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால்தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |