சுவிற்சர்லாந்தின் தலைநகரில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா
உழவுத்தொழிலுக்கும் அதனை வாய்கச்செய்யும் இயற்கைக்கும், கதிரவனுக்கும் நன்றி வணக்கம் செய்யும் முகமாக தமிழர்கள் தொண்டுதொற்று கொண்டாடி வரும் மரவுவழி விழா உலகெங்கினும் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சுவிற்சர்லாந்தில் பேர்ன் அருள் ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 14.01.2022 வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் பெருவிழாவாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
கதிரவன் சிலை ஓரையில் (தனுசு இராசியில்) இருந்து சுறவத்திற்கு (மகரம்) செல்லும் காலத்தை கணித்து சுறவத்திங்கள் (தை) முதலாம் நாள் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு இயற்கையினைப் போற்றும் விழாக இது விளங்குகின்றது.
சுவிற்சர்லாந்தின் தலைநகரில் அருள் ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில்
நடைபெற்ற இப்பெருவிழாவில் பலநூறு தமிழர்கள் சுவிற்சர்லாந்து அரசின்
மகுடநுண்ணித் தொற்றுக்கட்டுப்பாட்டு விதிகளை ஒழுகிப்பங்கெடுத்துள்ளதுடன், சுவிற்சர்லாந்து நாட்டவர்களும் விருந்தினர்களாக விழாவில் பங்கெடுத்து
சிறப்பித்துள்ளனர்.
பல்சமய இல்லத்தின் தலைமை இணைப்பாளர் காறின் மிக்கிற்யுக் அவர்கள் தமிழர் மரபு மறை ஒழுகி பொங்கலில் அரிசி இட்டுள்ளதுடன், பல்சமய இல்லத்தின் முகாமையாளர் திருமதி. ஊர்சுலா எக்லோசியாவும் பொங்கலோ பொங்கல் என்று தமிழில் குலவையிட்டு கதிரவனிற்கு படையலிட பொங்கல் பானைக்குள் அரசி நிறைத்தார். தமிழ் இலக்கியத்தில் தைத்திங்கள் தொடர்பாக பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்டு பாடப்பட்டுளதை காண முடிகின்றது.
கழகம் கண்ட சங்க இலக்கியத்தில் தமிழர் திருநாள் பற்றிய பாடல்கள் நிறைந்துள்ளது. 'வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்" எனும் செய்யுள் பொருளில் தைமாத்தில் மழை பெய்வதானால் மழையில் நனைந்த குரங்குகள் உணவு உண்ணது இருந்து நோற்பதை ஒத்ததாக பெண்கள் நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி ஈர உடையோடு வரும் காட்சியை எடுத்துக்காட்டுவதன் படி தைப்பொங்கலுக்கான ஏற்பாடுகள் அங்கு இடம்பெற்றிருக்க வேண்டும் என்கின்று நற்றிணை எனும் செய்யுள்.
அதுபோல் புறநானுற்றிலும், ஐங்குறுநூற்றிலும்: 'நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பர்படிந் துண்ணும் நின்பரத்தை மார்பே" தைத்திருநாளில் பெண்கள் கூட்டமாக நீராடி வருவதாக பாடல் குறிப்பிடுகின்றது.
'தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகைப் பாடலாலும் தமிழர் திருநாள் தொன்மைத் தமிழர்களால் கொண்டாடப்பட்டிருப்தையும் காணலாம். பழந்தமிழ்ப்பாடல் உவமைகளில் இருந்து வேறுபட்டு, சுவிற்சர்லாந்து நாட்டில் கடும் குளிருக்குள்ளும் கதிரவன் தன் ஒளிக்கதிர்களை செறிவாகச் செறிந்த நல்வேளை சுவிசிலும் பொங்கல் தைத்திருநாள் மிகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
காலச்சூழல் காரணமாக வழமைகள் சில மாறினாலும் ஐரோப்பாவில் சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் தைத்திங்கள் முதலாவது நாள் ஞானலிங்கேச்சுரர் முற்றத்தில் பொங்கல் இனிமையாக நடைபெற்ற செயல், தமிழர்களின் பண்பாட்டு நீட்சியைக் காட்டிய காட்சியாகவும் அமைந்திருந்தது, அடியார்களுக்கு மிகுந்த அகபுற மகிழ்வையும் நிறைவையும் அளித்துள்ளது.
1921ல் மறைமலையடிகள் முன்மொழிந்து, 1935லும் 1954லும் விடைத்திங்கள் (வைகாசியில்) திருவள்ளுவர் விழாக்கொண்டாடப்பட்டு, 2008ல் தமிழக அரசின் அரசாணையுடன் புத்தாண்டாக அறிவிக்கப்பட்ட தமிழ்ப்புத்தாண்டாகவும் தைத்திருநாள் அமைந்துள்ளது.
பொதுவாக நாம் ஆங்கில நாட்காட்டிகளைப் பயன்டுத்தி வருகின்றோம். கணிகர்கள் (சாத்திரத்திற்கு) திருவைந்துறுப்பு (பஞ்சாங்கம்) பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழுக்கு அடையாளமாக தமிழர்கள் வள்ளுவர் தோற்றத்தை தமிழ் ஆண்டாக அறிவித்துள்ளனர். எவ்விழா ஆனாலும் உள்ளத்தில் இனிமை அளிக்குமானால் அதை அன்புடனும் அறத்துடனும் கொண்டாடினால் நன்றே என சைவநெறிக்கூடம் நோக்குகின்றது.
அவ்வகையில் சுவிசில் புலம்பெயர் இளந்தமிழ்ச் சமூகத்திற்கு தமது வேரையும் பண்பாட்டு அடையாளத்தையும் கற்றுக்கொடுப்பதுடன், தமிழர் விழா என்பது இனிமையான நினைவாகப் பதியப்பட வேண்டும் என்ற வகையிலும்,ஞானலிங்கேச்சுரத்தில் பொங்கல் திருநாளை தமிழ்ப்புத்தாண்டு ஆகவும் நோற்கப்பட்டு மாலை குழந்தைகளுக்கு பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
48 நாட்களாக நோற்கப்பட்டு வந்த ஐயப்பன் பெருநோன்பு நிறைவு மாலை 19.00 மணிமுதல் சுறவப்பேரொளிவிழாவாக (மகரசோதி) கொண்டாடப்பட்டு வழிபாடுகள் ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்றன.
ஞானலிங்கேச்சுரத்தில் நண்பகல் வெண்பொங்கலுடன் அருளமுதும் மாலை பல்சிறப்பு அருளமுதும் வழங்கப்பட்டு தைத்திருநாள் சிறப்பாக நிறைவுற்றுள்ளது.