நாட்டின் தலைமையை தீர்மானிக்க தமிழ் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை, தமிழ் மக்கள் சார்பாக சரியான விதத்தில் அணுக தமிழ் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும் என தென்கயிலை குரு முதல்வர் அகத்தி அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (19) அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி அறி்க்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இலங்கையில் இன்று அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றதன் விளைவாக ஜனாதிபதி பதவி துறப்பிக்க செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தலைவர்களின் பங்களிப்பு
தொடர்ந்து, நாட்டின் ஆட்சி தலைமையை தீர்மானிப்பதில் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கு சாதகமாக எமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு, அனைத்து தமிழ் தலைவர்களும் முன்வர வேண்டும்.
புதிய ஜனாதிபதியை தீர்மானிப்பதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் செல்வாக்கு செலுத்தும். இந்த நிலையில், எம்மிடையே உள்ள பேதங்களை மறந்து, ஒட்டு மொத்த இனத்தின் நலனை முன்னுறுத்தி, தமிழ் தேசிய அடிப்படை கோட்பாடுகளின் கோரிக்கைகளை முன்வைத்து, வேட்பாளர்களிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
உடனடி இணக்கப்பாடும் நீண்ட கால தீர்வுகளும் வழங்கப்பட வேண்டிய விடயங்கள்
1. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட்டு பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும்
2. நேரடியாக ஒப்படைத்து காணமல் போனோர் விவகாரத்தில் நீதியான தீர்வும் உடனடி நீண்ட கால நிவாரணங்களும் வழங்கப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும்
3. வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார நிதியம் புலம் பெயர் முதலீடுகளிற்கு பாதுகாப்பும் தங்கு தடையற்ற ஊக்குவிப்பும் வழங்கப்பட வேண்டும்
4. ஆக்கிரபமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு, தொல்பொருள், வன விலங்கு மற்றும் மகாவலி ஆக்கிரமிப்பு வலய பிரகடனங்களை மீளப்பெற வேண்டும்.
5. தாயகம், சுயநிர்ணயம், அடிப்படையில் நிரந்த தீர்வும் முன்னதாக இடைக்கால நிர்வாக பரீசீலனையும் மேற்கொள்ளப்பட வேண்டும்
இந்த விடயங்களை அடிப்படையாக கொண்டே பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும்”, என தெரிவித்துள்ளது.