சர்வதேச நாணய நிதியம் தொடர்பான வாக்கெடுப்பை பகிஷ்கரிக்கும் கூட்டமைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(28.04.2023) நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் மூன்றாவது நாளாக இன்று காலை ஆராம்பமாகியது.
இந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக பங்குபற்றாக சூழ்நிலை இருப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அழுத்தம்
இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினாரால் வாக்களிக்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தும் மற்றைய உறுப்பினர்களால் அது மறுக்கப்பட்டிருந்தது.
இதனால் தற்போது ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்த்து வாக்களிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுத்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்திற்கமையவே ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய வாக்கெடுப்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தை ஏற்காமலிருந்திருந்தால் தாமும் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருக்க மாட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவு
அரசை எதிர்க்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், நாடு எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக, IMF உடன்பாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு எடுத்துள்ளது.
டலஸ் அழகப்பெருமவின் கருத்து
இந்த பிரேரணைக்கு எதிராக தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிப்பதாகவும் உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சியின் ஆதரவு
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.