வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - டலஸ் வெளியிட்ட கருத்து
"நான் ஜனாதிபதியாகி இருந்தால் என்னோடு நிறைவேற்று அதிகாரமாக்க ஜனாதிபதி முறைமை ஒழிந்திருக்கும். வரலாற்றில் முதல் தடவையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் இருப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் எனச் சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைவதற்கு ஒரேயொரு காரணம் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து அரசொன்றை அமைப்பதற்கு எடுத்த முடிவுதான்.
நான் ஜனாதிபதியாக வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸதான் பிரதமர் என்று அன்று பகிரங்கமாகக் கூறியிருந்தேன். நான் ஜனாதிபதியாகி இருந்தால் வரலாற்றில் முதல் தடவையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் இருப்பதற்கு வாய்ப்பிருந்தது.

ஆட்சியில் இருக்கும் கட்சி
அநேகமாக ஒருவருடத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியிருப்பேன். அதேவேளை, தேர்தல்களையும் ஒழுங்கு முறையில் நடத்தியிருப்பேன்.
என்னோடு நிறைவேற்று அதிகாரமிருக்க ஜனாதிபதி முறைமை ஒழிந்திருக்கும். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை எந்தளவு மோசமானது என்பது இப்போது எங்களுக்குத் தெரிகின்றது. மூன்று அரசமைப்புகளை நாம் கண்டுள்ளோம்.
அதில் இறுதியாக 1978இல் உருவாக்கப்பட்ட மூன்றாவது அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தோடு நாம் நிற்கின்றோம். இந்த அரசமைப்புகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஆட்சியில் இருக்கும் கட்சியை - அதன் தலைவரைத் பலப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்குமாகும்.
மக்கள் நலன்களுக்காக - நாட்டின் நலன்களுக்காக இவை உருவாக்கப்படவில்லை. தேர்தல் முறைமையும் அந்த நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன.

குற்றவியல் பிரேரணை
இப்போதுள்ள தேர்தல் முறைமையை ஜே.ஆர் கொண்டு வந்தது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில். அவரே அப்போது இதைக் கூறியுள்ளார்.
இப்போதுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரம் வரை அதிகரித்தவர் ரணில் விக்ரமசிங்க. அவரே இப்போது சொல்கின்றார் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று. அவரே அந்தப் பிழையைச் செய்துவிட்டு இப்போது அவரே அதைத் திருத்த வேண்டும் என்கின்றார்.
இந்த நிலைமைகள் மாற வேண்டும். நான் ஜனாதிபதியாகி இருந்தால் இந்த நிலைமைகளை மாற்றியிருப்பேன்." மேலும், தேர்தலை ஒத்திப்போடல் என்பது முழுமையான அரசமைப்பு மீறல்.
இந்தக் காரணத்தை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கனுக்கு எதிராகக் குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் என்ற ஒன்று இல்லை
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகின்றது. சட்டம் - அரசமைப்பு - ஜனநாயகம் - சம்பிரதாயம் இப்படி எந்த விடயத்தையும் பார்ப்பதாக அரசு இல்லை 20 தடவைகள் இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவே தெரிவித்துள்ளது.
தேர்தலை ஒத்திப்போடுவதற்குத் தேர்தல் என்ற ஒன்று இல்லையே என்று கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 82 ஆயிரத்து 800 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் செலுத்தியுள்ள கட்டுப்பணம் மாத்திரம் 186 மில்லியன் ரூபா. இப்படி இருக்கும்போது தேர்தல் என்ற ஒன்று இல்லை என்கின்றார் ஜனாதிபதி. தேர்தலை நடத்துவதற்குப் பணப்பிரச்சினை இங்கில்லை. அதிக பணம் செலவழித்துப் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றது அரசு.
பெரஹெரா - சுதந்திர தின நிகழ்வு போன்றவற்றுக்கு அதிகப் பணம் செலவழிக்கப்பட்டது. அமைச்சரவையும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கெல்லாம் பணம் உண்டு. தேர்தலை நடத்துவதற்கு மாத்திரம்தான் பணம் இல்லை என்று அரசு கூறுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
