இன்று வெளியாகும் விஜயின் இறுதி தீர்மானத்திற்காக காத்திருக்கும் தமிழகம்! வரலாற்று திருப்பத்தில் தமிழ்நாட்டு அரசியல்களம்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 234 தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகளின்படி, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு மிக நெருக்கமாக 108 இடங்களைப் பெற்று, தவெக தமிழகத்தின் முதன்மை அரசியல் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
அதேநேரம், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளன.
கூட்டணி ஆட்சி முறை
இவ்வாறிருக்கையில், தவெக மேற்கொள்ளவுள்ள கூட்டணி ஆட்சி முறை தொடர்பிலான தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், மக்களவையில் 12ஆவது எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி விஜயை தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, தவெக விஜய், காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து எதிர்பாரப்புகள் எழுந்துள்ளன.
எவ்வாறிருப்பினும், கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் எடுக்கவுள்ள இறுதி முடிவு இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.
எனவே, இந்த தீர்மானம் குறித்து இன்று தமிழக வெற்றிக் கழகம், இறுதி முடிவுகளை அறிவிக்கும் என சர்வதேச பரப்பில் எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் அதிகாரப்பூர்வ மாற்றங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
வழக்கமாக ஒரு மாநில முதலமைச்சருக்கு வழங்கப்படும் உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் கென்வாய் (Convoy) வாகனங்கள் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு சென்றுள்ளன.
முதலமைச்சருக்கான பாதுகாப்பு
ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து நிற்க, பொலிஸ் உயர் அதிகாரிகள் விஜயுடன் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று வரை ஒரு அரசியல் கட்சித் தலைவராகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த விஜய், இன்று மாநிலத்தின் மிக உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
விஜயின் இந்த அதிரடி வெற்றிக்கு இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களின் மிகப்பெரிய ஆதரவே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. மாற்றத்தை விரும்பிய மக்களின் தீர்ப்பின் மூலம், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது.
தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றுள்ள தவெக, தற்போது ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறத் தேவையான இதர ஆதரவுகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், சென்னை வீதிகளில் அவரது கான்வாய் வாகனங்கள் வலம் வருவது தமிழக அரசியல் மாற்றத்தின் புதிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.