கரூரில் அதிக வாக்குப்பதிவு.. வரலாற்றுச் சாதனை கண்ட தமிழக சட்டமன்ற தேர்தல்.. வெற்றிவாய்ப்பு யாருக்கு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு வெளியான தகவலின்படி 85.15 வீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளர்கள் களமிறங்கிய தொகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் 86.11 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 92.09 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தனது தேர்தல் தொகுதியில் கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
பெரம்பூரில் 89.73 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி கிழக்கில் 81.77 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குப்பதிவு வீதம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் சாதகமான கருத்துக்களை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 74.33 வீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
முதலிடத்தில் கரூர்..
மற்ற முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளை விட இங்கு வாக்குப்பதிவு குறைவாக உள்ள நிலையில், வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மாவட்டம் வாரியாகப் பார்த்தால் கரூரில் 92.63 வீத வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் 90 சதவீதத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து, மொத்தமாக 85.15 என்ற வரலாற்றுச் சாதனை சதவீதம் பதிவாகியுள்ளது.
கரூர் 92.63 என முதலிடத்தில், சேலம், நாமக்கல் 90 மேல் வாக்குகளுடன் பின்தொடர்கின்றன. அதிக வாக்குப்பதிவு ஆட்சிக்கு எதிரான சீற்றமா அல்லது புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனரா என்ற கேள்வி சர்வதேச ரீதியில் எழுந்துள்ளது.